Jun 11, 2011

மானிடம்!!

சுட்டெரிக்கும் கோடையில்
போகும் பாதையில்
ஒரு குழாயடி
சந்தோசம்....
உடல் வியர்க்கிறது
மூளை குளிக்கச்சொல்லுகிறது
குளிக்கமட்டுமே சொல்கிறது
மனமோ குளித்தால் தண்ணீர்
போகும் பாதையை பாத்திகட்டி
அருகில் உள்ள செடிகளுக்கு
வழியமைத்து குளிக்கச்சொல்லுகிறது .......

வழிதவறிய காட்டில்
ஒரு மாமரம் ..
மூளை மாங்காயைப் பறித்து
பசியாற சொல்கிறது
பசியாற மட்டுமே சொல்கிறது
மனமோ பசியாறிவிட்டு
சிறிது தொலைவில் மாங்கொட்டையை
மண்ணில் புதைக்கச்சொல்லுகிறது
மீண்டும் ஒரு மரம் வளர .........

அவசரமாக நடக்கையில்
பாதையில் வாழைப்பழத் தோல்
கண்ணில் படுகிறது ..
மூளை அதை ஓராமாக காலால் தள்ளிவிடச்சொல்லுகிறது
காலால் தள்ளிவிட மட்டுமே சொல்லுகிறது
மனமோ அதை கையில் எடுத்து
எதிரே வரும் ஆட்டிற்கோ, மாட்டிற்கோ
கொடுக்கச்சொல்லுகிறது ....

வீட்டின் வாயிற்படியில்
ஒரு யாசகன் ...
மூளை சில்லறையை கொடுக்கச்சொல்லுகிறது
சில்லறையை மட்டுமே கொடுக்கச்சொல்லுகிறது
மனமோ யாசகனை உள்ளே அழைத்து
சுத்தம் செய்ய தண்ணீர் கொடுத்து
உணவு பரிமாறி வழியனுப்ப சொல்லுகிறது ....

முன்பெல்லாம் மூளையோடு
மனதும் சரிவர இணைந்து இருந்தது
இப்போ
மனதை தொலைத்து விட்டு
மூளையோடு மட்டும்
அப்படி எங்குதான்
தொலைகிறது இந்த மானிடம் ?


....அப்துல் ரஹ்மான்.... 
     harmys

1 comment:

Anonymous said...

superbbbbbbb