Showing posts with label மாலிக். Show all posts
Showing posts with label மாலிக். Show all posts

Jul 1, 2011

ஞானப்பறவைகள்!

வழக்கமான வாழ்க்கையைத் துறந்து தன்னிலை அறியும் வேட்கையில் வாழ்வின் பாதையை மாற்றி பயணித்து வெற்றி கண்டவர்கள் சித்தர்கள்.

போகர், திருமூலர், கொங்கனார், சுந்தரானந்தர், சிவவாக்கியார், உரோமமுனி, பாம்பாட்டி சித்தர், பதஞ்சலி முனிவர் போன்றோர் பிரபலமானவர்கள்.

யய்யாடி! கோவணத்தைக் கட்டிக்கிட்டு, கையிலே குச்சியை வெச்சிகிட்டு காடு, மலை, கொகைன்னு பெரிய க்ரூப்பே திருஞ்சிருக்கா? ன்னு வடிவேலுத்தனமா கேட்க வேண்டாம். இன்னும் கூட இந்தப்பட்டியல் நீளலாம் என்பது ஆய்வாளர்கள் கருத்து.

இவர்கள் பழமைமிகு தமிழ்க் கலாசசரத்திற்கும், அதீத சிந்தனைக்கும் கிடைத்த அரிய பெரும் பொக்கிஷங்கள் என்றே சொல்லலாம். அன்று சித்தர்கள் என்பவர்கள் உருவம் அற்ற ஓர் இறைவனையே வழிபட்டார்கள்.

அவர்களின் பார்வையில் கடவுள் வழிபாடு என்பது மனிதமனத்தின் செம்மைப்படுத்பட்ட உயர்நிலை. அத்தகைய மேலான மனப்பக்குவத்தை பயிற்சிசியின் மூலம் எவரும் அடையமுடியும் என்பதை அவர்களின் பல பாடல்கள் நிரூபிக்கின்றன.

இறைநிலை, இறைவன் என்கிற தத்துவார்த்தங்களை வைத்துக்கொண்டு மக்களை எமாற்றிடும் ஆன்மீகத்தை கடுமையாகச் சாடியுமிருக்கின்றனர். இது குறித்து பாம்பாட்டிச்சித்தர் பாடல் ஒன்றில்

பூசை செய்தாலே சுத்தபோதம் வருமோ?
பூமி வலம் செய்ததனார் புண்ணியம் உண்டோ?
ஆசையற்ற காலத்திலேயே ஆதி வஸ்துவை
அடையலாம் என்று துணிந்து ஆடாய் பாம்பே ...
என்று ஆன்மீகத்தின் பெயரால் செய்யும் கேலிக்கூத்தை கேள்விக் குள்ளாக்குகிறார்.

அகத்தியர் துவங்கி பல சித்தர் பெருமக்கள் அருளிய ஹோம முறைகளும் நமக்கு கிடைக்கின்றன. இந்த ஒரு குறிப்பிட்ட உயர்சாதிப் பிரிவினரால் மட்டுமே நடத்தப்படவேண்டும என்றும், அவர்கள் தான் அதை செய்து பலனை வழங்க வேண்டும் என்ற விதிகளை உடைத்து, ஆர்வம் உள்ள எவரும் ஹோமத்தினை செய்திடலாம் என்று வலியுருத்துகிறது சித்தரியல்.

வைத்தியம், வான சாஸ்த்திரம், இரசவாதம், சூத்திர சாஸ்த்திரம், யோகம் போன்றவற்றிலும் அவர்கள் தேர்ச்சி கண்டவர்களாக இருந்தனர். ஊனினைச் சுருக்கி, உள்ளொளி பெருக்கும் தன்மையினைக்கண்டு தெளிந்த மேதைகள் அவர்கள்.

இறைபக்தி இல்லாத ஒருவனிடம் எத்தனை செல்வங்கள் இருந்தாலும் அவையனைத்தும் பயனற்றவைகளாகவே போகும் என்றும்,  இறைபக்தியே ஒருவனை வாழ்க்கையில் உயர்த்தும் என்றும் சொன்ன இடைகாட்டுச் சித்தர் தன் பாடல் ஒன்றில்....

அவித்த வித்து முளையாதே தாண்டவக்கோனே இறைபக்தி அற்றவர் கதியடையார் தாண்டவக்கோனே " என்கிறார்.

சித்தர்களை வகைப்படுத்த முடியுமே தவிர வரையறுக்க இயலாது. அவர்கள் தனித்துவமானவர்கள் ஆதியும் அந்தமும் ஆன இறைவனிடம் ஒடுங்குவதையே இலக்காக கொண்டிருந்தனர். இந்த வகைக்கு பட்டினத்தார், அருணகிரி நாதர், தாயுமானவர் போன்றோரை சொல்லலாம்.

இப்பொழுது நாம் பயன்படுத்தும் சித்த வைத்திய முறை அவர்கள் நமக்களித்த பொக்கிஷமே. உலோகங்கள், உப்புகள், பாஷாணங்கள், வேர்கள், இலைகள், பட்டைகள், பூக்கள், முத்து, பவளம், மற்றும், பல உடல் பொருட்கள் விலங்குகளின் உடலிலிருந்து கிடைக்கும் கஸ்தூரி, புனுகு சலம், சாணம், முதலியவற்றின் குணங்கள் எல்லாம் கண்டறிந்து அவற்றின் நோய்த்தீர்க்கும் பண்புகளை கண்டறிந்தவர்களும் அவர்களே .

ஜெர்மன், சுவீடன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் சித்தர்களின் மருத்துவ குறிப்புகளை வியப்புடன் ஆராய்ந்து வருகின்றன. சீனாவில் அநேகர் சித்த உணவு முறையே பின்பற்றுவதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. ஆஸ்ரமம் என்ற பெயரில் இவர்களுக்கு மாட மாளிகைகளோ, பக்த கோடிகளோ இல்லை என்பது போல சித்தர்களுக்கு அந்தரங்கமும் இல்லை, இதுவரை வழக்குகளேதும் பதிவானதுமில்லை.

இவர்கள் ரத்தம் குடிக்கும் அரசியவாதிகளுமல்லர், மனித அறிவு தின்னும் சாமியார்களுமல்லர். மாறாக இம்மியளவும் பிரதிபலன் பாராது மனிதகுல நல்வாழ்விற்கு தம்மை அர்ப்பணித்துக்கொண்ட சித்தர்களும் மகாத்மாக்களே!

Jun 13, 2011

தாயே!

வறண்ட பூமியும் வெடித்த நிலமுமாய்

கிடந்ததென் வாழ்வு

ஓராயிரம் அவச்சொல்லுக்கு

ஆளாகியதென் பருவம்

ஊராரும் மதிக்கவில்லை

ஊர்க்குருவிகளின் வருகையேதுமில்லை

காலநதி புதுப்புனலாய்

புரண்டு வரும் கனவு ....

புல்லினங்கள் அசைந்தாட

நறுமலர்கள் பூத்துக்குலுங்கும்

ஓர் உன்னத நாளில்

உன் மடிமீது

இன்னொரு முறையும் பிறப்பேன்.

Jun 3, 2011

ஹைய்யய்யோ ஹைய்யய்யோ பிடிச்சிருக்கு!!

கலைஞருக்கு 88 வது பிறந்த நாள் விழா. வாழ்த்தி பேச வைரமுத்து, குஷ்பு என்று பல பிரபலங்கள் என்ற செய்தியை பார்த்து நமக்கு வியப்பேதுமில்லை.

கவிப்பேரரசு ,"முத்தமிழ் அறிஞரே, என் தாயால் நான் வளர்ந்தேன் - உங்களால் தான் என் தமிழ் வளர்ந்தது" என்பார்.

கவிஞர் வாலியோ, "நீங்கள் உடன்பிறப்புகளுக்கு எழுதிய மடல்களைப் படித்து தான் எனக்கு எழுத்து வந்தது என்பார். குஷ்புவோ அண்ணாவிலிருந்து ஆரம்பித்து திராவிட பாரம்பரியத்தை, அதன் சாதனைகளைப் பட்டியலிட்டு தலைவரின் அருமை, பெருமைகளை விலாவாரியாக(!) பேசுவார்.

மிகக்குறுகிய காலத்தில் கட்சியில் இணைந்து சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கப்பட்ட குஷ்பு இங்கேயும் "ஜாக்பாட்" ராணி தான். இத்தனை எளிதில் யாருக்கு கிடைக்கும் இவ்வளவு பெரிய அந்தஸ்த்து? பால்ய வயதிலிருந்தே அடி உதைப்பட்டு கட்சிக்காக உழைத்தவர்கள் அறிவாலயத்தின் வாசலில் நிற்கிறார்கள்... இதுவெல்லாம் கட்சியின் உள்விவகாரம்-நான் சொல்லவருவது இதுவல்ல.

அன்புமகள் கனி திகார் சிறையில், மனைவி ராஜாத்தி அம்மாளின் தலைக்கு மேல் ஸிபீஐ யின் கத்தி, குடும்பமே ஸ்பெக்டரத்தின் கிடுக்கிப்பிடியில். இந்த நிலையிலும் பிறந்தநாள் கொண்டாட உங்களால் மட்டும்தான் முடியும்.

வரலாறு காணாத தோல்வியை சந்தித்தகட்சிக்கு புத்துயிர் ஊட்ட வேண்டாமா? தொண்டர்களை உற்சாகப்படுத்துவது தவறில்லையே என்கிறீர்கள். நியாயம்தான். இப்போதாவது சிறந்த தலைமையைத் தேர்ந்தேடுங்கள், இது தான் சரியான தருணம், அவரின் கீழ் தொண்டர்களை ஒன்றுபட செய்யுங்கள். புதிய தலைவரின் சீரிய செயல்பாட்டால் சில வருடங்களில் கட்சி வளமானதொரு மாற்றத்தை தொட்டுவிடும்.

இந்த மாற்றத்திற்கு நீங்கள் பெரியதொரு தியாகம் செய்தாக வேண்டும். கல்லக்குடி போராட்டத்தில் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்ததையே எத்தனை காலத்திற்கு சொல்லிக்கொண்டிருப்பீர்கள்?

பெரியாரின் பாசறையில் வளர்ந்த நீங்கள் மஞ்சள் துண்டிலிருந்து வெள்ளைக்கு மாறுவதும்,  இப்போதும் இதுபோன்ற விழாக்களில் கவனம் செலுத்துவதும் நீங்கள் நடந்து வந்த பாதைக்கு நேர் முரணில்லையா? கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதெல்லாம் நாட்டுமக்களுக்கு கதைசொல்லத்தானா? உங்களுக்கில்லையா?

எப்போதும் ஏடாக்கூடமாகவே பேசும் நண்பரிடம், கலைஞக்கு என்ன ஆயிற்று? ஏன் இப்படி மக்கள் எரிச்சல் படும்படியாக நடந்துகொள்கிறார் என்று கேட்டேன், அதற்கு அவர் கலைஞருக்கு காத்தோ கருப்போ புடிச்சிருக்கு என்றார் ---நம்பி தொலைத்தேன்!

May 26, 2011

பாபர் மசூதியும் பார்ப்பன வேட்டையும்!!

May 26, முஸ்லிம்களின் 450 வருடம் வரலாற்று பழமைவாய்ந்த பாபர் மஸ்ஜித் ஹிந்து வெறியர்களால் இடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அலஹாபாத் உயர் நீதி மன்றத்தின் (சிறுபிள்ளைத்தனமான) தீர்ப்பை உச்சநீதி மன்றமே கண்டித்தது.

உச்சநீதி மன்றம் நல்லதீர்ப்பு தரும் என்ற நம்பிக்கையில் முஸ்லிம்களும், நல்லெண்ணம் கொண்டவர்கள் நீதி தேவை என்று கருதுவதையும் நாம் அறிந்ததுதான்.

அப்போதைய அரசின் துரோகத்தையும், நடந்து முடிந்த பெருங்கோர நிகழ்ச்சியையும் நான் இங்கு நினைவுப்படுத்த காரணம் உண்டு.

சினிமா என்பது கலையையும், கலாச்சாரத்தையும் காட்டிய காலமெல்லாம் போய், வன்முறையையும், வக்கிரத்தையும் பிரதிபலிப்பதாய் இருக்கின்றன என்பதை நம் யாராலும் மறுக்க முடியாது.

ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடிய வீரபாண்டிய கட்டபொம்மன், திப்புசுல்த்தான், நேதாஜி, கப்பலோட்டிய தமிழன், பகத் சிங், போன்றவர்களின் கதாபாத்திரங்களை வைத்து எடுக்கப்பட்ட படங்களை இன்னும் நாம் ரசிக்கவே செய்கிறோம்.

அப்படங்கள் தேசபக்தியின் அடையாளங்களாகத் திகழ்ந்தன. அதுபோல் இந்தியில் வெளிவந்த அமீர்கானின் "தாரே ஜமீன் பர்" ஐ பார்த்து வியக்காதவர்கள் இல்லை.

நர்கீஸின் "மதர் இந்தியா" வை பார்த்துவிட்டு அழாமல் எழமுடியாது. படங்கள் எனப்பட்டவை உண்மையை, வாழ்வின் மென்மையை அச்சு அசலாக சொல்வதாய் இருக்கவேண்டும்.

அகிரா குரோசாவின் ஜப்பானிய திரைப்படங்கள் ஏன் சாதிக்கின்றன?. இந்நிலையில் பாப்ரி என்ற பெயரில் (பாபர் மசூதியை பற்றி) ஒரு படத்தை ஹிந்துத்துவா பால்தாக்ரேயின் மருமகள் சுமிதா தாக்ரே எடுப்பதாக செய்தியை படித்த பிறகு நமக்கு ஏற்படும் ஐயங்கள் ஏராளம்.

அவர் நடுநிலையோடு பாபர் மசூதியின் வரலாற்றை சொல்வதாக இருந்தால் வரவேற்கலாம். அதே நேரம் தாக்ரேயின் குடும்ப பின்னணியில் உள்ள ஒருவர் இந்தப்படத்தை எடுப்பதால் அது வகுப்புவாத சிந்தனை அற்றதாக இருக்கும் என்பதில் நமக்கு நம்பிக்கை இல்லை.

அரசியல் ஆதாயம் தேடுவோரும், சிறுபான்மையினரை சீண்டிப்பிழைப்பு நடத்துவோரும் வாய்ப்புக்காக காத்திருக்கும் இந்த தருணத்தில், இப்படம் மீண்டும் சர்ச்சையை கிளப்பி பெரும் கலவரங்களோடு ரத்த பலி கேட்க்குமோ ? .................................சிந்திப்போம் !!

May 19, 2011

துப்பாக்கிகளும், துர்பாக்கியங்களும்!!

May 20, உலகமகா பயங்கரவாதி என சித்தரிக்கப்பட்ட பின்லேடன் கொல்லப்பட்டு விட்டார்.

இனி உலக மக்கள் அரசியல், கலாசார ரீதியான வாழ்கையை சுதந்திரமாக எந்தவித அச்சுறுத்தலும் இன்றி வாழலாம் என்ற இந்த அறிவிப்பு ரஷ்யாவிடம் இருந்து வந்தால் ஆச்சரியம் இல்லை.

ரஷ்யாவின் நாடு பிடிக்கும் கொள்கைக்கு எதிராக அணி திரண்டு போராடியவரை முகம் மாற்றி, சாயம் ஏற்றி பயங்கரவாதியாக அடையாளப்படுத்திய துரதிஷ்டத்தை அரசியல் அறிவுடையோர் எளிதில் புரிந்து கொள்வார்கள்.

சவுதியில் செல்வ வளமிக்க குடும்பத்தில் பிறந்த பின்லேடன் ஆப்கானிஸ்தானத்தில் ஜலாலாபாத் புல்தரையில் துப்பாக்கியோடு நடக்கவைத்தது எது? அந்நிய ஆக்கிரமிப்பு சக்திகள்தானே!!

அங்கேயே அவருக்கு கொம்பு சீவி அழகு பார்த்தவர்கள் ஒபந்த குளறுபடிகளால், இரு துருப்புகளின் "துப்பாக்கி குறிகளும்" இலக்கு மாறியது பரிதாபம்.

அவரைபற்றிய பல கட்டுகதைகள் ஆதிக்க சக்திகளின் பத்திரிக்கை வியாபாரத்தையும் பெருக்கியது. அவரை வைத்து நடத்தப்பட்ட பல நாடகங்கள், இன்னும் புரிந்து கொள்ள முடியாத புதிராகவே இருக்கிறது.

அவரது வளர்ச்சிமுதல், அவரது இறப்புவரை மர்மங்களே மிஞ்சி நிற்கின்றன. ஒரு தனிமனிதனுக்காக செலவளிக்கப்பட்ட பொருளாதாரத்தை பார்க்கும் போது பெரும் வியப்பே ஏற்படுகிறது.

இந்த நேரத்தில் நம் முன்னாள் முதல்வர் ஸ்பெக்ட்ரம் ஊழலில் திணறிக்கொண்டிருக்கும் கருணாநிதி கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவான் என்று வசனம் திரை வசனம் பேசியுள்ளார். இவர் எடுக்காத கத்தியா? இவர் அரசியலில் தூக்காத கத்தியா?

முதல்வர் அவர்களே, உங்கள் வசனங்களை எல்லாம் ரசித்த மனோகரா காலம் இல்லை இது. மக்கள் மாறிவிட்டார்கள். தவிர உங்கள் அரசியல் வாழ்வில் கத்திகளும், காசுகளும் நீங்கள் மறந்திருந்தாலும் உங்கள் சக்கர நாற்காலிக்கு தெரியாத சரித்திரங்களா?

உங்கள் கருத்தை ஒரு வாதத்திற்கு எடுத்து கொண்டாலும் அதனோடு எழும் இன்னொரு கேள்விக்கும் பதில் சொல்லுங்கள். அதில் யார் கத்தி, அதை பிடித்திருக்கும் கை யாருடையது?

Apr 22, 2011

நாடுகளறிவோம்!!

* அமெரிக்கா - ஆளுமைத்தனம்.
* ரஷ்யா - சிதைந்த மகுடம்.
* ஆஸ்திரேலியா - மலைகளின் அரசி.
* ஜப்பான் - "YEN " ணம் போல் வாழ்வு.
* ஆப்ரிக்கா - மண்ணில் தெரியும் வானம்.
* அரேபியா - ஆயிலில் ஓடும் ஆயுள் ரேகை.
* ஈராக் - ரத்தம் ஒரே நிறம்.
* ஈரான் -ஃ பத்வா ரெடி.
* எகிப்து - எட்டிய கனி.
* லிபியா - நடுங்கும் நாற்காலிகள்.
* சுவிசெர்லாந்து - கனவுகள் விற்பனைக்கு.
* இந்தியா - அரசியல் அராஜகம்.
* இலங்கை - ஊசலாடும் உயிர்கள்.
* பாகிஸ்தான் - 'பாமி' ருக்க பயமேன்?.
* பங்களாதேஷ் - பங்களாக்களுக்கு ஏங்கும் தேசம்.
* தாய்லாந்து - குற்றங்கள், கொள்ளை மலிவு.
* ஹாங்காங் - வாழ வாழ ஆசை.
* சீனா - சவால்கள் சந்திக்கப்படும்
* கொரியா - காரியத்தில் கண்.
* சிங்கபூர் - சுத்தம் சோறு போடும்.
* மலேசியா - ரப்பரும், மரமும், காஜானாவுக்கு உறுதி.
* இந்தோனிசியா - நீரின்றி அமையா உலகு!.
* பாலஸ்தீன் - இரவுகள் விடிவதற்காக
* இஸ்ரேல் - ஆக்கிரமிப்பு அரக்கன்.
* பிரிட்டன் - ஏகாதிபத்திய வலை.

அன்புடன் : மாலிக் - லாஸ்ஏஞ்சலஸ்.