Jun 3, 2011

ஹைய்யய்யோ ஹைய்யய்யோ பிடிச்சிருக்கு!!

கலைஞருக்கு 88 வது பிறந்த நாள் விழா. வாழ்த்தி பேச வைரமுத்து, குஷ்பு என்று பல பிரபலங்கள் என்ற செய்தியை பார்த்து நமக்கு வியப்பேதுமில்லை.

கவிப்பேரரசு ,"முத்தமிழ் அறிஞரே, என் தாயால் நான் வளர்ந்தேன் - உங்களால் தான் என் தமிழ் வளர்ந்தது" என்பார்.

கவிஞர் வாலியோ, "நீங்கள் உடன்பிறப்புகளுக்கு எழுதிய மடல்களைப் படித்து தான் எனக்கு எழுத்து வந்தது என்பார். குஷ்புவோ அண்ணாவிலிருந்து ஆரம்பித்து திராவிட பாரம்பரியத்தை, அதன் சாதனைகளைப் பட்டியலிட்டு தலைவரின் அருமை, பெருமைகளை விலாவாரியாக(!) பேசுவார்.

மிகக்குறுகிய காலத்தில் கட்சியில் இணைந்து சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கப்பட்ட குஷ்பு இங்கேயும் "ஜாக்பாட்" ராணி தான். இத்தனை எளிதில் யாருக்கு கிடைக்கும் இவ்வளவு பெரிய அந்தஸ்த்து? பால்ய வயதிலிருந்தே அடி உதைப்பட்டு கட்சிக்காக உழைத்தவர்கள் அறிவாலயத்தின் வாசலில் நிற்கிறார்கள்... இதுவெல்லாம் கட்சியின் உள்விவகாரம்-நான் சொல்லவருவது இதுவல்ல.

அன்புமகள் கனி திகார் சிறையில், மனைவி ராஜாத்தி அம்மாளின் தலைக்கு மேல் ஸிபீஐ யின் கத்தி, குடும்பமே ஸ்பெக்டரத்தின் கிடுக்கிப்பிடியில். இந்த நிலையிலும் பிறந்தநாள் கொண்டாட உங்களால் மட்டும்தான் முடியும்.

வரலாறு காணாத தோல்வியை சந்தித்தகட்சிக்கு புத்துயிர் ஊட்ட வேண்டாமா? தொண்டர்களை உற்சாகப்படுத்துவது தவறில்லையே என்கிறீர்கள். நியாயம்தான். இப்போதாவது சிறந்த தலைமையைத் தேர்ந்தேடுங்கள், இது தான் சரியான தருணம், அவரின் கீழ் தொண்டர்களை ஒன்றுபட செய்யுங்கள். புதிய தலைவரின் சீரிய செயல்பாட்டால் சில வருடங்களில் கட்சி வளமானதொரு மாற்றத்தை தொட்டுவிடும்.

இந்த மாற்றத்திற்கு நீங்கள் பெரியதொரு தியாகம் செய்தாக வேண்டும். கல்லக்குடி போராட்டத்தில் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்ததையே எத்தனை காலத்திற்கு சொல்லிக்கொண்டிருப்பீர்கள்?

பெரியாரின் பாசறையில் வளர்ந்த நீங்கள் மஞ்சள் துண்டிலிருந்து வெள்ளைக்கு மாறுவதும்,  இப்போதும் இதுபோன்ற விழாக்களில் கவனம் செலுத்துவதும் நீங்கள் நடந்து வந்த பாதைக்கு நேர் முரணில்லையா? கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதெல்லாம் நாட்டுமக்களுக்கு கதைசொல்லத்தானா? உங்களுக்கில்லையா?

எப்போதும் ஏடாக்கூடமாகவே பேசும் நண்பரிடம், கலைஞக்கு என்ன ஆயிற்று? ஏன் இப்படி மக்கள் எரிச்சல் படும்படியாக நடந்துகொள்கிறார் என்று கேட்டேன், அதற்கு அவர் கலைஞருக்கு காத்தோ கருப்போ புடிச்சிருக்கு என்றார் ---நம்பி தொலைத்தேன்!

No comments: