மார்ச் 23,; ஆளும் கட்சியான தி.மு.க., தேர்தல் அறிக்கையில், குடும்பத்திற்கு கிரைண்டர் அல்லது மிக்சி வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆனால், பல மாவட்டங்களில் இன்றளவும் மூன்று மணி நேரம் வரை மின் தடை இருந்து வருகிறது.
அதை சரி செய்யாமல் கிரைண்டரும் மிக்சியும் கொடுத்து என்ன பயன் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. தமிழகத்தில் கடந்த பல மாதங்களாக மின் தடை இருந்து வருகிறது. சில இடங்களில் அறிவிக்கப்படாத மின் தடை உள்ளது. இதனால், பல தொழில்கள் முடங்கியுள்ளன.
சிறு தொழில் செய்யும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பும் இழந்து, அவர்களின் குடும்பங்கள் வறுமையில் தவித்து வருகின்றன.கடந்த சில மாதங்களுக்கு முன், மின் தடை பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என, மின் வாரியம் அறிவித்திருந்தது
ஆனால், இன்றளவும் அப்பிரச்னை தீர்க்கப்படவில்லை. இந்நிலையில், ஆளும் கட்சியான தி.மு.க., தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் கிரைண்டர் அல்லது மிக்சி வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்கு மக்களிடம் இருந்து பரவலான அதிருப்தி எழுந்துள்ளது.
இது குறித்து பல மாவட்டங்களை சேர்ந்த பொதுநல விரும்பிகள் கருத்து தெரிவித்ததாவது, கடந்த ஆறு மாதங்களில் மின் வினியோகம் தடை காரணமாக, பல்வேறு தொழில்கள் நலிந்துவிட்டன.
ஆயிரக்கணக்கான சிறு தொழில்புரிவோர் பாதிக்கப்பட்டுள்ளன. மிகப் பெரிய நிறுவனங்கள் கூட "ஷிப்ட்'களை குறைந்துக் கொண்டுள்ளன. வாரத்திற்கு மூன்று நாட்கள் என்ற அடிப்படையில் மாதத்திற்கு 15 நாட்கள் மட்டுமே வேலை வாய்ப்பு அளித்து வருகின்றனர். இதனால், குடும்ப வருமானமும் குறைந்துள்ளது.
இதற்கு இன்றளவில் தீர்வு காணப்படவில்லை. நிலைமை இப்படியிருக்க, வரும் தேர்தலுக்காக, கவர்ச்சிகரமான திட்டமாக, கிரைண்டரும், மிக்சியும் தருவதாக தி.மு.க., அறிவித்துள்ளது. இதற்கு பதில், அடுத்த ஐந்தாண்டிற்கு தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்திருந்தாலும் அது மக்களை திருப்திபடுத்தியிருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது சிறப்பு நிருபர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment