Apr 3, 2011

தமிழகத்தில் SDPI போட்டியிடும் தொகுதிகள் நிலவரம் !!

எப்ரல் 3, சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எட்டு தொகுதிகளில் முதன்முதலாக தேர்தல் களத்தில் தடம் பதித்துள்ள சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவுக்கு கிடைக்கும் வாக்குகள் அத்தொகுதியில் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்குமென அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

தி.மு.க, அ.இ.அ.தி.மு.க கூட்டணிகளில் சேராமல் தனித்து பலப்பரீட்சைக்கு களமிறங்கியுள்ளது எஸ்.டி.பி.ஐ. கடந்த பெப்ருவரி மாதம் சென்னையில் நடந்த கட்சியின் சென்னை மண்டல மாநாட்டில் திரண்டிருந்த மக்கள் வெள்ளம் அரசியல் தலைவர்களின் கவனத்தை ஈர்த்தது.

தமிழக சட்டசபைத் தேர்தலில் 28 முஸ்லிம் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தி.மு.க, அ.இ.அ.தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மொத்தம் ஒன்பது முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தால் உருவாக்கப்பட்ட மனித நேய மக்கள் கட்சி அ.இ.அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இக்கூட்டணியில் அக்கட்சிக்கு மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. முஸ்லீம் லீக் தி.மு.க கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் 3 இடங்களில் போட்டியிடுகிறது.

துறைமுகம் சட்டமன்றத்தொகுதியில் முஸ்லீம் லீக் வேட்பாளரான திருப்பூர் அல்தாஃபை எஸ்.டி.பி.ஐயின் வேட்பாளர் முஹம்மது ஹுஸைன் எதிர்கொள்கிறார். 1989 ஆம் ஆண்டு முதல் தி.மு.க தொடர்ச்சியாக வெற்றிப்பெற்றுவரும் தொகுதிதான் துறைமுகம்.

எஸ்.டி.பி.ஐ போட்டியிடுவதால்தான் முஸ்லிம் லீக்கிற்கு தி.மு.க இத்தொகுதியை ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆம்பூர், சேப்பாக்கம், ராமநாதபுரம் தொகுதிகளில் த.மு.மு. கவின் ம.ம.க போட்டியிடுகிறது.

ம.ம.கவின் ஒருங்கிணைப்பாளரும், த.மு.மு. கவின் தலைவருமான பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் ராமநாதபுரம் தொகுதியில் எஸ்.டி.பி.ஐ வேட்பாளரை எதிர்த்து களமிறங்கியுள்ளார்.

ராமநாதபுரம் தொகுதிக்கு உட்பட்ட கீழக்கரையிலிருந்து ஹஸன் அலி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவதால் கடும் போராட்டம் நிலவுவது உறுதி என தெரிகிறது.
த.மு.மு. கவிலிருந்து பிரிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ம.ம.க வேட்பாளர்களை தோற்கடிக்கப்போவதாக அறிவித்துள்ளது.

இந்திய தேசிய லீக் 3 அணிகளாக பிரிந்துள்ளது. தேசிய லீக்கில் ராஜாஹுஸைன் அணியைச்சார்ந்தவர்கள் ம.ம.க போட்டியிடும் 3 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். ராமநாதபுரம், கடையநல்லூர், தொண்டாமுத்தூர் தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐக்கு வெற்றிப்பெற வாய்ப்புள்ளதாகவும், இதர தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐக்கு கிடைக்கு வாக்குகள் பிற கட்சிகளின் வெற்றி-தோல்விக்கு நிர்ணாயகரமாகும் எனவும் அக்கட்சியின் தமிழக தலைவர் தெஹ்லான் பாகவி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்: தன்வீர் (சென்னை)

No comments: