Jun 2, 2011

மாட்டுக்கறியும், ராம கோபால ஐயரும்: ஒரு பார்வை!

JUNE 3, உத்தரப்பிரதேச இறைச்சிக்கூடங்களை எதிர்த்து ஜைன துறவி ப்ரபாசாகர்ஜி உண்ணாவிரதம் மேற்கொண்டாராம். அவரை கைது செய்த போலீசார் வண்டியில் கொண்டு சென்றார்களாம்.

ஜைன துறவிகள் எப்போதும் கால்நடையாக செல்வதால் இப்படி வண்டியில் கொண்டு சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறதாம்.

போலீசு கைது செய்தால் ஜீப்பில்தான் ஏற்றுவார்கள், அவன் ஜைனனோ இல்லை பொறுக்கி சங்கராச்சாரியோ இல்லை பிட்டுப் பட பூசாரி தேவநாதனோ யாராக இருந்தாலும் இதுதானே நடைமுறை?

அவரை ஜீப்பில் ஏற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை வெட்டி இல்லாத ஜைன, இந்துமதவெறி மற்றும் சைவ உணவு இயக்கங்கள் தில்லி,மும்பை, கொல்கத்தா என ஆங்காங்கே போராட்டம் நடத்துகிறார்களாம்.

இதன் தொடர்ச்சியாக சென்னை புளியந்தோப்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன ஆட்டிறைச்சிக் கூடத்தை எதிர்க்கும் காரணத்தையும் சேர்த்திருக்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பார்ப்பன இந்து முன்னணியின் தலைவர் இராம கோபாலன் தலைமையேற்றாராம்.

இதில் பேசிய இராம கோபாலன் ” பிராணிகளின் இறைச்சிகளை ஏற்றுமதி செய்வதற்காகவே இது போன்ற இறைச்சிக் கூடங்கள் அமைக்கின்றனர். நம் நாட்டில் இறைச்சியை உண்பவர்கள் குறைவான அளவே உள்ளனர்.

எனவே பிராணிகள் இறைச்சி ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும். புளியந்தோப்பில் 1000 மாடுகளும், 5000 ஆடுகளும் இறைச்சிக்காக வெட்டப்படும் என தகவல் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் கால்நடைகள் இல்லாத நிலையில் இருக்கும் கால்நடைகளை பலியிடுவதை அரசு தடுக்க வேண்டும். இந்த செய்திகளை அவாள் பத்திரிகைகளான தினமணி, தினமலர் இரண்டும் முக்கியத்துவத்துடன் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

முதலில் சைவ உணவு தின்பவர்களெல்லாம் மனிதாபிமானிகள் போலவும், இறைச்சி சாப்பிடுபவர்களெல்லாம் காட்டுமிராண்டிகள் போலவும் சித்தரிக்கின்ற இந்தப் பார்வை பார்ப்பனத் திமிரன்றி வேறென்ன?

இந்தியாவில் இறைச்சி சாப்பிடுபவர்கள் குறைவு என்று ராம கோபாலன் கூறியிருக்கும் பச்சைப் பொய்யை பாருங்கள். தமிழகம் முழுக்க தினசரி பல்லாயிரம் டன் கணக்கில் கோழிகளும், ஆடுகளும், மாடுகளும், மீன்களும் நுகரப்படுகின்றன.

இதில் காசுக்கேற்ற தோசை என்ற கணக்கில் ஏழைகள் மாடு, கருவாடு என்றும், பணக்காரர்கள் ஏற்றுமதி இறால், ஆடு, வான்கோழி என்றும் உண்கின்றனர்.

காய்கறிகளும், பருப்பு தானியங்களும் விண்ணைத் தொட்டுவிட்ட நிலையில் அதிகமும் உடலுழைப்பு வேலை செய்யும் ஏழைகளின் புரதத் தேவையை மலிவான மாட்டுக்கறியும், கோழிக்கறியும்தான் ஈடு செய்கின்றது.

மேலும் கூலி விவசாயிகள், தலித்துக்கள், பிற்படுத்தப்பட்ட சாதியினர், நகரத்து ஏழைகள் அனைவரும் இன்று மாட்டுக்கறியை விரும்பி உண்ணுகின்றனர். இத்தகை எளிய மக்களுக்கு இறைச்சியை அளிக்கக் கூடாது என்று சொல்வது பச்சையான பாசிசம் ஆகும்.

முன்பு போல கையேந்தி பவனில் மறைவாக இருந்து மாட்டுக்கறி உண்பது இப்போது மாறிவருகிறது. கேரளா, வடகிழக்கு மாநிலங்களில் மாட்டுக்கறி தேசிய உணவாகவே இருக்கிறது.

ஹரியாணாவில் செத்த மாட்டை உரித்தார்கள் என்று ஐந்து தலித்துகள் ஆதிக்க சாதி இந்துக்களால் கொல்லப்பட்டனர் என்பதிலிருந்தே இவர்களது காட்டுமிராண்டித்தனத்தை புரிந்து கொள்ளலாம்.

ஆகவே உழைக்கும் மக்களின் அடிப்படைத் தேவையான மாட்டுக்கறியை நாம் பிரபலமாக்குவதோடு, எல்லோரும் உண்ண வேண்டும். பார்ப்பனியத்தை எதிர்க்கிறேன் என்று சொல்லக்கூடிய அனைவரும் மாட்டுக்கறியை உண்ண வேண்டும்.

கோமாதா என்று பாசமாக உருகுபவர்கள் எல்லாம் அந்த கோமாதா தோலில் செய்த செருப்பு,  ஷூ,  பெல்ட்,  தொப்பி,  உடைகளை அணியாமல் இருப்பார்களா? மாட்டு எலும்பில் செய்யும் கால்சிய மாத்திரைகளை ஏற்கமாட்டோம் என்று அறிவிப்பார்களா?

மாட்டில் இருந்து மட்டும் நூற்றுக்கணக்கான பொருட்கள் செய்யப்படுகின்றன. மாடு நமது பொருளாதாரத்தை பெருக்கும் ஒரு கால்நடை மட்டுமே. அது நமது செல்வம். பார்ப்பனப் புனிதமல்ல.

1 comment:

ukkasha said...

non veg avaravar viruppam athan mulam kulir kayum muttalhal athatku matha sayam pusukirarhal