Oct 4, 2009
இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை கூடாது : பா.ஜ.க.திவிரவாத இயக்கம் கருத்து
சென்னை, அக். 4: தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய நாட்டுக் குடியுரிமைக் கொடுக்கக் கூடாது என்று பா.ஜ.க. தமிழகத் துணைத் தலைவர் எச். ராஜா கூறினார்.
தமிழக பா.ஜ.க.வின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் கட்சித் தலைமையகமான கமலாலயத்தில் தலைவர் இல. கணேசன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து எச். ராஜா செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கடந்த 10 மாதங்களாகத் தாக்கவில்லை என்று மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருப்பது முழு பூசணியை சோற்றில் மறைப்பது போல உள்ளது. சோனியா காந்திக்கு தமிழர்கள் மீதுள்ள வெறுப்பு காரணமாகவே, இலங்கைக்கு, மத்திய அரசு பல்வேறு உதவிகளைச் செய்துள்ளது என்றார் அவர். செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து அவர் மேலும் கூறியது: தமிழக மீனவர்கள் பாதுகாப்பு கருதி கச்சத்தீவை இந்தியா மீட்க வேண்டும்.
இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளை தன் கைவசம் வைத்துக் கொண்டு இந்தியாவுக்குள் சீனா அடிக்கடி ஊடுருவி வருகிறது. ஆனால் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு அதிக ஊடுருவல் இல்லை என்று கருத்துத் தெரிவித்துள்ள மத்திய அரசைக் கண்டிக்கிறோம்.
சமச்சீர் கல்வித் திட்டத்தில் மாணவர்கள் விரும்பும் அனைத்துப் பாடத் திட்டத்தையும் தமிழக அரசு தயாரிக்க வேண்டும். அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து ஆலயங்களை தனி வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும். பசுவதைத் தடைச்சட்டம் தமிழகத்தில் மீறப்படுவதைத் தடுக்க வேண்டும்.
மதமாற்றத் தடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களின் சேமநல நிதியில் 3 முதல் 5 சதவீதத்தை பங்குச்சந்தையில் போடுவது குறித்தத் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார் எச். ராஜா.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment