உங்கள் ஊரில் உள்ள சங்கங்களுக்கோ, பொது நல அமைப்புகளுக்கோ இப்படி ஒரு மனுவை கொடுத்து அவர்களை ஊரின் நலத்திட்டங்கள் பக்கம் இழுக்கலாமே
அனுப்புனர்:
(உங்கள் பெயர் மற்றும் முகவரி.)
பெறுநர்:
தலைவர் அவர்கள்
(உங்கள் ஊர் நல கமிட்டி, இளஞ்சர்கள் சங்கம், உங்கள் ஊரை சேர்ந்த ஏதாவது ஒரு பொதுநல அமைப்பு).
அன்புள்ள சகோதரர்களுக்கு,
நமது முன்னோர்கள் நமது ஊரை நம்வசம் கையளிக்கும் பொழுது அது சுத்தமானதாக, இயற்க்கை வளம் மிக்கதாக, நீர்வளம் மிக்கதாக இருந்தது. இன்றய சூழலில் ஊரின் நிலைமை மிகவும் மோசகரமானதாக இருக்கிறது. பல்லாண்டுகளாக சீர் செய்யப்படாத குளங்கள், ஏரிகள் மற்றும் ஊரை சுற்றி விஷச்செடியான சீமை கருவேல முள் மரங்கள் என்று ஊரே மாசுபட்டு கிடக்கிறது.
ஊரில் போதிய மருத்துவ வசதிகள் இல்லை, தரமான கல்வி கூடம் இல்லை, பிள்ளைகள் படிக்க நூலகமோ, விளையாட சரியான விளையாட்டு திடலோ, உடல் பயிற்சி கூடமோ இல்லை. தெருக்களில் போதிய மரங்கள் நடபடவில்லை, போதிய குடிநீர் வசதிகள் இல்லை. இதுதான் இன்றய நமது ஊரின் நிலை. இதை எல்லாம் சரிசெய்ய வேண்டிய பொறுப்பு நமதூர் மக்களுக்கு உண்டு. ஊழல் அரசுகள், அரசியல்வாதிகள் செய்வார்கள் என்று நம்பிக்கொண்டு இருப்பதை விட்டு நாம் ஒரு ஐந்தாண்டு திட்டத்தை வகுத்து, நமதூரை இயற்க்கை எழில் கொண்ட, அடிப்படை வசதிகள் பெற்ற ஊராக மாற்ற முடியும்.
திட்டங்கள்:
1 ). சீமை கருவேல மர ஒழிப்பு.
சீமை கருவேல மரத்தால் ஏற்படும் பாதிப்புகளை மக்களிடம் எடுத்து சொல்ல விழிப்புணர்வு கேம்பைன்கள் நடத்துவது, பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம், தெரு முனை பிரச்சாரம், வீடுகள் தோறும் சென்று சொல்வது, பஞ்சாயத்து நிர்வாக மற்றும் மாவட்ட நிர்வாக உதவி பெறுதல், லோக்கல் கேபிள் டிவி மூலம் பிரச்சாரம், வெளி ஊர்களில் வசிப்பவர்களின் நிலங்களை அவர்கள் அனுமதி பெற்று அவர்கள் உதவியோடு கருவேல மரங்களை அகற்றுதல், இவற்றின் மூலம் சீமை கருவேல மரத்தை முற்றிலும் அழிக்க முடியும்.
2). மரம் நடுதல்:
"மரம் வளர்ப்போம் மழை வளம் பெறுவோம்" என்கிற விளம்பர பலகைகள் வைத்தல். தெரு முனை பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு உண்டாக்குதல். நாமே தரமான மரக்கன்றுகளை இலவசமாக வழங்குதல், நாமே தெரு ஓரங்களில், ஊரை சுற்றிலும் முதல் கட்டமாக குறைந்தது 500 மரங்களை நடுதல், அந்த மரங்களை பாதுகாக்க சிறிய இரும்பு நெட் வலைகளை அடித்தல், தெருவில் யார் வீட்டு முன்பு மரம் நடுகிறோமோ அவர்களிடம் சொல்லி அந்த மரத்திற்கு தண்ணீர் ஊற்றி பாதுகாக்க செய்வது இதன் மூலம் ஊரில் ஒரு இயற்க்கை சூழலை ஏற்படுத்தலாம்.
3). ஏறி குளங்களை தூர் வாருதல்:
ஏறி குளங்களில் போதிய தண்ணீர் இல்லாததால் நமதூர் நிலத்தடி நீர் மிகவும் கீழே சென்று கொண்டு இருக்கிறது. இதை சரி செய்ய நியூஸ் செவன் தொலைகாட்சியோடு இணைந்து, நமது பகுதி பள்ளி, கல்லூரி மாணவர்களின், விவசாய சங்கங்களின், லயன்ஸ் கிளப், சென்சிலுவை சங்கம், சாரணர் அமைப்பு, போன்ற தொண்டு நிறுவனங்களின் உதவியை பெற்று இதை சீர் செய்வது.
4). இயற்க்கை விவசாயம்:
நமதூரில் வீடுகளுக்கு பின்னால், முன்னாள், மொட்டை மாடியில் என்று போதிய இடவசதி உள்ளது. இதில் வீட்டுக்கு தேவையான காய், கறிகளை எப்படி விவசாயம் செய்யலாம் என்பதை பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரமும், இலவச விதைகளும் பயிற்சியும் வழங்கலாம். மாடு, ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, இவற்றில் மூலம் கிடைக்கும் வருமானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல். அவற்றை வளர்க்க அரசாங்க கடனுதவி பெறவும், அதேநேரம் நாமும் தேவையான அடிப்படை மூல கூறுகளை வழங்கியோ அல்லது சிறு கடனுதவி மூலமாகவோ தொழில் சிறக்க ஊக்குவிக்கலாம் .
5). நூலகம் அமைத்தல்:
பிள்ளைகள் படிக்க தேவையான ஒரு நூலகம் அமைப்பது. அதை சேர்ந்தாற்போல் இளஞ்சர்கள் உடல் பயிற்சி செய்யும் கூடம் மற்றும் அவசர உதவிக்கு ஒரு ஆம்புலன்ஸ் சேவை இவைகளை நிறுவலாம்.
6). சிறு தொழில் கூடம்:
நமதூர் மக்களுக்கு சிறு தொழில் கூடம் ஒன்று அமைத்து அதன் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்கலாம்.
7). கல்வி நிறுவனங்களை சீர் செய்தல்:
நமதூர் கல்வி நிறுவனங்களை சீர் செய்து அவற்றின் தரத்தை உயர்த்தி, மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேன்படுத்தி கொடுக்கலாம்.
No comments:
Post a Comment