Nov 21, 2015

தஞ்சையின் வளம் காக்க வந்த கத்து குட்டி!

"கத்து குட்டி" மண் சார்ந்த சிந்தனை, இயற்கை பாதுகாப்பு , சுற்றுச் சூழல்முன்னேற்றம் ஆகியவற்றை பேசும் சிறப்பு மிக்க படம். தமிழகத்தின் நெல் களஞ்சியமான, தஞ்சை காவிரி டெல்டாப் பகுதியை நச்சுப் பாலைவனமாக்க மாற்ற முயலும் மீத்தேன் எரிவாயுத் திட்டத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஒரு அருமையான படம்.   

“விவசாயிகளின் பட்டினிச் சாவு என்பது அவன் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் சாகவில்லை.  பலபேருக்கு சோறு போடும் விவசாயத்தை ஒழுங்காக செய்ய முடியவில்லையே என்ற விரக்தியாலும் அவமானத்தாலும் அவன் சாகிறான் என்று விவசாயத்தை, விவசாயிகளை கவுரவிக்கும் படம்.

“விவசாயிகளின் தற்கொலைகளை கள்ளக் காதல் , வயிற்று வலி , குடும்பத் தகராறு இப்படி பொய்யான காரணங்களை சொல்லி அரசும், அதிகார வர்க்கமும் எப்படி கொச்சைப்படுத்துகிறது என்பதை தோலுரித்து காட்டும் சிறப்பு மிக்க படம். 

“கர்நாடகா தண்ணீர் கிடைக்க வழி செய்யவில்லை, கேரளா தண்ணீர் கிடைக்க வழி செய்யவில்லை, ஆனா பாண்டிச்சேரி (சாராயம்) தண்ணியும், டாஸ்மார்க்கும் தாராளமா கிடைக்க அரசு வழி செய்கிறது என்று பூரண மதுவிலக்கின் அவசியத்தை உணர்த்தும் பாடல் மிக அருமை.
செல்போன் டவர்களால் சிட்டு குருவி இனம் மட்டுமே அழிவாதாக நம்மில் பெரும்பாலோர் அறிந்துள்ளோம். ஆனால் வேறு என்ன என்ன பறவைகள்,  மற்றும் உயிர்கள் அழியும் என்பதை பட்டியல் இட்டு காட்டுகிறது இந்த படம்.  இதன்  மூலம் நவீன கண்டுபிடுப்புகள் சுற்று சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் உபயோகப்படுத்த அரசு மிகவும் கவனம் எடுக்க வலியுறுத்துகிறது
தமிழகத்தின் நெல் களஞ்சியம் தஞ்சை மாவட்டத்தின் இயற்கை அழகை அழகாக கமிரா படம் பிடித்துள்ளது. மீத்தேன் திட்டம் நிறைவேறினால் தஞ்சை மண் வளம் அழிந்து பாலைவனமாக மாறும் என்பதை மிக அழகாக எடுத்து சொல்லியிருக்கிறார் இயக்குனர். இந்த அருமையான விழிப்புணர்வு படத்தை தமிழ் கூறும் நல்லுலகுக்கு கொண்டுத்த தயாரிப்பாளர், இயக்குனர் நிச்சயம் பாராட்டுதலுக்கு உரியவர்களே.  நடிகையின் தொடையையும், தொப்புளையும் காட்டி கேவலமாக படம் என்கிற பெயரில் கலாச்சார சீரழிவை உண்டாக்கி வயிறுவளர்க்கும் கூட்டம் இதை பார்த்தாவது திருந்துவார்களா?                                                                                                   *மலர் விழி*

No comments: