Aug 1, 2015

ஜனநாயகத்தில் மரணதண்டனைக்கு இடம் கிடையாது!

யாகூப் மேமனின் கருணை மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பப்பட்டதும் மற்றும் அவசரகதியில் அவர் தூக்கிலிடப்பட்டதும் நம் நாட்டின் நீதித்துறை நிர்வாகத்தின் மீது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. 
பொதுமக்களின் உணர்ச்சிகளை பயன்படுத்தி அரசுத்துறைகளுக்கு மட்டுமல்லாது நீதித்துறைக்கும் நெருக்கடியை கொடுக்கும் ஃபாஸிச சக்திகளின் திட்டத்திற்கு இச்சம்பவம் மற்றுமொரு உதாரணம். யாகூப் மேமனை மிகவிரைவாக தூக்குமேடைக்கு அனுப்புவதில் பி.ஜே.பி அரசு எந்தஅளவிற்கு மும்முரமாக செயல்பட்டது என்பதை நாம் காணமுடிந்தது. 
ஆனால் 2002 குஜராத் கலவரத்தில் முஸ்லிம்களை கொன்று குவித்த கொலைக் குற்றவாளிகளான தனது கட்சியின் தலைவர்களுக்கு மரணதண்டனை வழங்குமாறு இதுவரை ஆளும் அரசு முறையிட்டதில்லை. தண்டனை வழங்குவதில் இரட்டை நிலைபாட்டையும் மற்றும் கருணை மனு மீதான நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதையும் இது தெளிவாக உணர்த்துகிறது.
மும்பை தொடர் குண்டுவெடிப்புகளுக்கு முன்னர் மும்பையில் நடத்தப்பட்ட கொடூரமான கலவரத்தின் குற்றவாளிகள் இன்றும் சுதந்திரமாக சுற்றித்திரிவதை காணமுடிவதால்தான் யாகூப் மேமனுக்கு நேர்ந்ததை நீதித்துறை நிர்வாகத்தின் இரட்டை நிலைபாட்டிற்கான மற்றொரு உதாரணமாக இந்திய குடிமக்கள் கருதுகின்றனர்.
ஜனநாயகத்தில் மரணதண்டனைக்கு இடம் கிடையாது என்ற எங்களின் நிலைபாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். பிற்படுத்தப்பட்ட பிரிவினர், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராகவே பெரும்பாலான மரணதண்டனைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை பல்வேறு ஆய்வுகள் உணர்த்துகிறது. அரசியல் இலாபத்திற்காக பொதுசமூகத்தின் உணர்ச்சிகளை திருப்திபடுத்திடும் நோக்கோடு மரண தண்டனைகளை வழங்கும் இக்கலாச்சாரத்தினால் மத சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நீதித்துறை மீது கொண்டிருக்கும் நம்பிக்கை வலுவிழக்கும்.
மரண தண்டனை என்பது அரசின் வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல். மக்கள் செய்யும் குற்றங்களை குறைப்பதற்குத்தான் சட்டத்தில் தண்டனைகள் உள்ளன, அதற்குமாறாக இது போன்ற முறையற்ற தண்டனைகளின் வாயிலாக விசாரணையேயின்றி தண்டிக்கப்பட வேண்டும் என்ற மனநிலை மக்களிடையே உருவாகும். வகுப்புவாத மற்றும் ஜாதி சார்ந்த நிலைபாடு அரசு நிர்வாகங்களில் ஊடுருவியிருக்கும் வரையில், அரசாங்கத்தின் செயல்பாடுகள் அரசியல் நோக்கோடு இருப்பதற்கும் மற்றும் நீதித்துறை தவறாக செயல்படுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது.
நமது நாட்டின் சட்ட புத்தகங்களில் இருந்து மரண தண்டனையை நீக்க வேண்டுமென்றும், நீதித்துறை நிர்வாகத்தினை வகுப்புவாத மற்றும் ஜாதி சார்ந்த பாரபட்சங்களில் இருந்து விடுபட வேண்டுமென்றும் பாப்புலர் ஃப்ரண்ட் மீண்டும் வலியுறுத்துகிறது.
 இப்படிக்கு
கே.எம்.ஷெரிஃப்,
தேசிய தலைவர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

No comments: