JULY 17, தனது ஜூகிபா கதையை அப்படியே திருடி, ஸ்கிரீன் பிளே செய்து, சினிமா சமாச்சாரங்களான பாடல் காட்சிகள், சண்டைக்காட்சிகள், கிராபிக்ஸ் உத்திகள் போன்றவற்றை சேர்த்து எந்திரன் படத்தை டைரக்டர் சங்கர் இயக்கியிருக்கிறார்.
இந்தக் திருட்டுக்கதையை தயாரிப்பாளராக இருந்து படமாக வெளியிட்டிருக்கிறார் கலாநிதி மாறன், என்றெல்லாம் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததோடு எந்திரன் படக்கதையை தனது கதை என்று அறிவிக்க வேண்டும் என்றும் இதற்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்திருந்தார்.
மேலும் டைரக்டர் சங்கரும், தயாரிப்பாளர் தயாநிதிமாறனும் மோசடியாக கதையைத் திருடி கூட்டுச் சதி புரிந்து சுயலாபம் பார்க்கும் வகையில் நடந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மீது பதிப்புரிமை சட்டப்படியும் மோசடிக் குற்றத்தின் அடிப்படையிலும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல்துறை ஆணையராக இருந்த ராஜேந்திரனிடம் புகாரும் கொடுத்திருந்தார்.
அப்போது திமுக ஆட்சி நடந்ததால் திகைத்துப்போன போலீஸ் அதிகாரிகள், புகாரில் இருந்து கலாநிதிமாறனின் பெயரை நீக்கினால்தான் புகாரை பதிவு செய்ய முடியும் என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து எழும்பூர் சிறப்பு மெட்ரோ பாலிடன் கோர்ட்டில் பிரைவேட் வழக்கு தொடர்ந்தார் தமிழ்நாடன்.
வழக்கை விசாரித்த நீதிபதி சிவகுமார், இதுகுறித்து கலாநிதி மாறனுக்கும், டைரக்டர் சங்கருக்கும் கோர்ட்டில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். இதில் அதிர்ந்துப்போன கலாநிதி மாறனும், சங்கரும் சென்னை உயர்நீதிமன்றத்தில், இந்த வழக்கை விசாரிக்க இடைக்கால தடையை வாங்கினர்.
இந்த நிலையில் 15.07.2011 அன்று எழும்பூர் கோர்ட்டில் எந்திரன் கதைத் திருட்டு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கலாநிதிமாறன் மற்றும் சங்கரின் வழக்கறிஞர்கள், உயர்நீதிமன்றம் கொடுத்த இடைக்காலத் தடையைக் காட்டியதோடு, இது விசாரிக்க உகந்த வழக்கல்ல. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர்.
தமிழ்நாடன் தரப்போ அப்பீல் மூலம் இடைக்காலத் தடையை கேட்கும் முயற்சியில் இருப்பதாக தெரிவித்தது. இதைத்தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கலாநிதி மாறன் மற்றும் சங்கரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் வழக்கை செப்டம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. தமிழ்நாடன் சார்பில் வழக்கறிஞர்கள் ராஜகோபால், எட்வின், சிவகுமார் ஆகியோர் ஆஜராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்சி மாறிய பிரகாவது நீதிகிடைக்குமா? என காத்திருக்கிறது தமிழ்நாடன் தரப்பு.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நல்ல தீர்ப்பு கிடைக்கவேண்டும்
Post a Comment