JULY 28, பெங்களூர்: கர்நாடக முதல்வர் எடியூரப்பா குடும்பத்துக்குச் சொந்தமான அறக்கட்டளைக்கு சட்டவிரோதமாக ரூ. 30 கோடி நன்கொடை அளிக்கப்பட்டுள்ளதாக லோக் ஆயுக்த நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தெரிவித்தார்.
கர்நாடகத்தில் சட்டவிரோத சுரங்கத் தொழில் தொடர்பான லோக் ஆயுக்தவின் இறுதி அறிக்கை அந்த மாநில அரசிடம் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதில் இரண்டு சுரங்க நிறுவனங்களுக்குத் தடையில்லா சான்று ஒப்புதல் எடியூரப்பா அரசு அளித்துதது தொடர்பாக எடியூரப்பா குடும்பத்துக்குச் சொந்தமான அறக்கட்டளைக்கு ரூ. 10 கோடி நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் ஊரக மாவட்டத்தில் ராச்சேனஹள்ளி கிராமத்தில் எடியூரப்பா குடும்பத்துக்குச் சொந்தமான அறக்கட்டளைக்கு ரூ. 1.40 கோடி மதிப்புள்ள ஒரு ஏக்கர் நிலத்தை ரூ. 20 கோடிக்கு ஒரு சுரங்க நிறுவனம் வாங்கியுள்ளது. இவ்வளவு அதிக விலை கொடுத்து அந்த நிலத்தை வாங்க வேண்டிய நிர்பந்தம் குறித்துக் கேள்வி எழுகிறது. நிலத்தை விற்றதற்கான ஆவணத்தில் ஏராளமான குளறுபடிகளும் உள்ளன.
அறிக்கையின் நகலை ஆளுநருக்கு அளித்துள்ளேன். லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் எடியூரப்பா மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளேன். ரெட்டி சகோதரர்கள், குமாரசாமி: இரண்டு சுரங்க நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியதற்காக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் பெயரையும் அறிக்கையில் சேர்த்துள்ளோம்.
சட்டவிரோத சுரங்கத் தொழிலில் தங்கள் குடும்ப நிறுவனங்களுக்கு பங்கில்லை என்று ஜனார்தன ரெட்டி மற்றும் கருணாகர ரெட்டி தொடர்ந்து கூறிவருகிறார்கள். இதில் உண்மையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் ஏராளமான சாட்சி ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன என்றார் சந்தோஷ் ஹெக்டே.
அறிக்கை தாக்கல்: பெங்களூர் விதானசெüதாவில் மாலை 4 மணிக்கு தலைமைச் செயலாளர் எஸ்.வி.ரங்கநாத்திடம் சட்டவிரோத சுரங்கத் தொழில் தொடர்பான விசாரணையின் இறுதி அறிக்கையை லோக் ஆயுக்த பதிவாளர் மூசா குன்ஹிநாயர் மூலே வழங்கினார். அறிக்கை மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக ரங்கநாத் தெரிவித்தார்.
எடியூரப்பா, அவரது குடும்பத்தினர், அமைச்சர்கள் ஜனார்த்தனரெட்டி, கருணாகரரெட்டி, ஸ்ரீராமுலு, வி.சோமண்ணா, முன்னாள் முதல்வர் குமாரசாமி, காங்கிரஸ் எம்பி அனில்லாட், பாஜக எம்எல்ஏ நாகேந்திரா உள்ளிட்ட ஏராளமான அரசியல்வாதிகள் மற்றும் 787 அரசு உயரதிகாரிகளின் பெயர்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
25,228 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் 450 பக்கங்களுக்கு நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தனது பரிந்துரைகளை அளித்துள்ளதாகத் தெரிகிறது.
2006 முதல் 2010 வரை பெல்லாரி, சித்ரதுர்கா, தும்கூர் மாவட்டங்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் குறித்து 31 தலைப்புகளில் லோக் ஆயுக்த நீதிபதி விவரித்துள்ளார். நான்கு லட்சம் ஆவணங்கள் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளன. 50 லட்சம் உள்ளீடுகளில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. லோக் ஆயுக்தவின் இறுதி அறிக்கை கர்நாடக அரசியலில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment