JULY 28, புது தில்லி: காஷ்மீர் பிரச்னையில் அமைதியான முறையில் தீர்வுகாண இந்தியாவும், பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டுள்ளன. இந்த விஷயத்தில் மேலும் நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹீனா ரப்பானி கர், மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை தில்லியில் புதன்கிழமை சந்தித்துப் பேசினார். இதில் காஷ்மீர் விவகாரம், பயங்கரவாத பிரச்னை, இரு தரப்பு உறவு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பேச்சு குறித்து இந்தியா, பாகிஸ்தான் தரப்பில் திருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் பகுதி மக்கள் இருநாடுகளுக்கும் சென்று வருவதில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தவும், காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்க பரஸ்பரம் மேலும் நம்பிக்கையுடன் செயல்பட முடிவு செய்யப்பட்டது. இருநாட்டுக்கு இடையிலான வர்த்தக உறவு, புனித இடங்களுக்கு சுற்றுலா செல்வது போன்றவற்றை ஊக்குவிக்கவும், இருநாடுகளுக்கு இடையிலான போக்குவரத்தை அதிகரிக்கவும் இரு அமைச்சர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
மும்பை தாக்குதல் குறித்து பாகிஸ்தானில் நடைபெற்று வரும் வழக்கின் முன்னேற்றம், மனிதாபிமான நடவடிக்கைகள், பொருளாதார ஒத்துழைப்பு, அமைதி, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு அமைச்சர்களும் விவாதித்தனர். இரு நாட்டு அணு விஞ்ஞானிகள் குழு, அதிகாரிகள் குழு கூட்டத்தை பாகிஸ்தானில் வரும் செப்டம்பர் மாதம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டறிக்கை: பேச்சுக்குப் பின் இருநாடுகளின் சார்பிலும் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ஜம்மு-காஷ்மீர் பிரச்னை குறித்து இருநாட்டு அமைச்சர்களும் முக்கியமாகப் பேசினர். இந்த விஷயத்தில் தொடர்ந்து பேச்சு நடத்த வேண்டும். விஷயத்தை தொலைநோக்குப் பார்வையுடன் அணுக வேண்டும். வேறுபாடுகளைக் களைந்து, நம்பிக்கையூட்டும் வகையில் அமைதியான தீர்வை எட்ட வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் பாகிஸ்தானுடன் நல்லுறவு வலுவாகும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார் எஸ்.எம்.கிருஷ்ணா.
1 comment:
நம்பிக்கையுடன் காத்திருப்போம்
நல்லது நடந்தால் சரி....
Post a Comment