Apr 12, 2011

தேமுதிக கட்சி பிரமுகர் படுகொலை!! விஜயகாந்த் ஆவேசம்!!

ஏப்ரல் 13, தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரத்தைச் சேர்ந்த தேமுதிக பிரமுகர் அசோகன் கொலை செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’பென்னாகரம் ஒன்றிய தே.மு.தி.க. நெசவாளர் அணி செயலராக செயல்பட்டு வந்த அசோகன், நேற்று தேர்தல் பணி செய்து கொண்டிருக்கும்போது தி.மு.க.,வினரால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

அவரால் மாற்றுக் கட்சியினரின் வாக்கு சிதறிப் போய்விடும் என்று எண்ணி அவரை படுகொலை செய்திருக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தி.மு.க. தமிழகத்தில் தோற்று விடுவோமோ என்ற அச்சத்தில் ஆங்காங்கே வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதும், தட்டிக் கேட்டால் தாக்குவதும் சகஜமாகி உள்ளது.

முதல்வர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூரில் கூட பணம் பட்டுவாடா தாராளமாக நடைபெறுகிறது. அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் 27 வயதான தேமுதிக தொண்டரை கொன்றிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட ஆட்சி தமிழகத்தில் மீண்டும் தலை தூக்க வேண்டுமா என்ற கேள்விக்கு மக்கள்தான் பதில் தரவேண்டும். இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க தியாகத்தை செய்த அசோகனுடைய ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இந்தப் படுகொலைக்கு காரணமான குண்டர்களையும், ரவுடிகளையும் உடனடியாக கைது செய்து விசாரணை நடத்த காவல் துறையினரையும், தேர்தல் ஆணையத்தையும் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

No comments: