Feb 6, 2010

விடுதலைப் புலிகளின் ஆயுதக் கிடங்கு கண்டுபிடிப்பு!.


கொழும்பு,பிப்.6: விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னிப் பகுதியில் பெரிய ஆயுதக்கிடங்கை இலங்கை போலீஸôர் கண்டுபிடித்துள்ளனர்.

இலங்கை ராணுவத்துடனான இறுதிக் கட்டப் போரில் இந்த ஆயுதக் கிடங்கை புலிகள் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தி இருக்கலாம் என்று அந்நாட்டு போலீஸôர் கருதுகின்றனர்.

பூமிக்கடியில் பல அடி ஆழத்தைக் கொண்ட அந்த ஆயுதக்கிடங்கில் போலீஸôர் சோதனை நடத்தினர். அப்போது அதற்குள் தற்கொலைப் படை வீரர்கள் அணியும் வெடிகுண்டுகள் அடங்கிய ஆடைகள், 7000 சக்தி வாய்ந்த கண்ணிவெடிகள் உள்பட சக்தி வாய்ந்த ஏராளமான ஆயுதங்கள் இருந்தன. அவை அனைத்தையும் போலீஸôர் கைப்பற்றினர்.

தவிர, அந்த ஆயுதக் கிடங்கில் இருந்து பிரபாகரன், அவரது குடும்பத்தார் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுடன் தொடர்புடைய ஆவணங்கள் ஏராளமானவற்றையும், 56 சி.டி.க்களையும் போலீஸôர் கைப்பற்றினர்.

பிரபாகரனுக்கு நெருக்கமானவர்கள் 6 பேரை இலங்கை அரசு கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. அவர்கள் அளித்த தகவல் அடிப்படையில்தான் இந்த ஆயுதக் கிடங்கை போலீஸôர் கைப்பற்றினர் என்று அந்நாட்டில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

இப்போது கிடைத்துள்ள ஆவணங்கள் அனைத்தையும் முக்கியமானவையாக அரசு கருதுகிறது. புலிகள் அமைப்பு தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைக்கு இந்த ஆவணங்கள் பெரும் உதவியாக இருக்கும் என்று அரசு நினைக்கிறது என்றும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

இலங்கையில் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே 30 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்த போர் கடந்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவுற்றது. இதையடுத்து புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் கண்ணிவெடிகள் உள்பட ஆயுதங்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டது.

வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகள் ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை நடத்தியதாகவும், இதனால் இப்பகுதியில் புலிகளின் ஆயுதக் கிடங்குகள் இருக்கலாம் என்றும் அரசு நம்புகிறது. இதனால் இப்பகுதியில் ஆயுதங்களை மீட்கும் பணியில் அதிகப்படியான குழுக்களை ஈடுபடுத்தியுள்ளது.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயகே, வன்னிப் பகுதியில் ஆயுதங்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடந்து வருவதாகவும், ஏராளமான ஆயுதங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், வன்னிப் பகுதியில் புலிகள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை பார்த்து மீட்புக் குழுவினரே ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

No comments: