Feb 6, 2010

தமிழக கடலோர பகுதிகள் வழியாக மீண்டும் கடத்தல்.


ராமநாதபுரம்:ராமநாதபுரம் கடலோர பகுதிகள் வழியாக மீண்டும் கடத்தல் அதிகரித்துள்ளதால், பழைய மற்றும் புதிய ஏஜன்டுகள் குறித்து போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.இலங்கையில் போர் முடிவுக்கு வந்தபின், கடத்தல் முற்றிலும் நின்றுவிட்டதாக போலீசார் தெரிவித்து வந்தனர். ஆனால் தற்போது, இலங்கையில் உள்ள முக்கிய ஏஜன்டுகள் மூலம், மீண்டும் தமிழகத்திலிருந்து பல்வேறு பொருட்களை கடத்தி, வெளிநாடுகளுக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.

இதன் மூலம்தான் கடந்த மாதம் இலங்கையிலிருந்து எட்டு லட்சம் ரூபாய் ஹவாலா பணம், கீழக்கரை பகுதியை சேர்ந்த ஒருவருக்கு அனுப்பப்பட்டு, துப்பாக்கி குண்டுகள், ஹெராயின், சேட்டிலைட் போன் போன்ற பொருட்கள் கடத்த முயன்ற போது, நான்கு பேரை கியூ பிரிவு போலீசார் பிடித்தனர்.இதில், சேட்டிலைட் போன் வைத்திருந்ததால் பயங்கரவாத செயல்களுக்காக கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம், போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தியாவிற்குள் ஏதேனும் அசம்பாவித செயல்களில் ஈடுபடலாம் என சந்தேகித்து, உயர் அதிகாரிகள் வரை தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும், இச்சம்பவத்தில் முக்கியமான ஒருவர், ஏற்கனவே இலங்கைக்கு பலமுறை ஆட்களை அனுப்பியது, விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு பொருட்கள் கடத்திய வழக்கில் தொடர்பு உடையவர் என்பதால், இவர் மூலம் மேலும் பல ஏஜன்டுகள் உருவாகியிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் கீழக்கரை பகுதியில், வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற பவளப்பாறைகளை, கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட இரண்டு பேர் தப்பினர். தப்பியவர்கள், பவளப்பாறைகள் மட்டும்தான் வைத்திருந்தனரா, துப்பாக்கி குண்டுகள், போதை பொருட்கள் போன்றவை வைத்திருந்தனரா என்பது தெரியாத நிலையில், கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீண்டும் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக கியூ பிரிவு மற்றும் உளவு பிரிவு போலீசார், கடலோர பகுதி இன்பார்மர்கள் மூலம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments: