Apr 12, 2011

தமிழக தேர்தலும்!! பாதுகாப்பு நடவடிக்கைகளும்!!

ஏப்ரல் 12, தமிழக சட்டசபை தேர்தல் புதன்கிழமை (13/04/2011) நடைபெற உள்ளது. தேர்தல் களத்தில் 234 தொகுதிகளிலும் 2773 வேட்பாளர்கள் உள்ளனர். கடந்த 3 வாரங்களாக தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் நடந்தது.

11/04/2011 மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. நாளை (புதன்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணி வரை ஓட்டு போடலாம். வாக்காளர்கள் பயமின்றி சுதந்திரமாக வந்து வாக்களிக்க பாதுகாப்பு உள்ளிட்ட எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்துள்ளது.

வாக்குப் பதிவுக்கான மின்னணு எந்திரங்கள் ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்கள் இன்று ஓட்டுப் பதிவுக்கு தேவையான இதர பொருட்களை பெற்றுக் கொண்டு, இன்றே ஓட்டுச் சாவடிக்கு சென்று எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடிப்பார்கள். தமிழகம் முழுவதும் மொத்தம் 54 ஆயிரத்து 314 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் 10 ஆயிரம் வாக்குச்சாவடிகள் வெப் காமிரா மூலம் படம் பிடித்து இணையத் தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். அதை தேர்தல் அதிகாரிகள் கண்காணிப்பார்கள். மேலும் 10 ஆயிரம் ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு முழுமையாக படம் பிடிக்கப்படும்.

இவை தவிர சுமார் 13 ஆயிரம் தேர்தல் பார்வையாளர்கள் ரோந்து சுற்றி வந்து ஓட்டுப் பதிவை கண்காணிப்பார்கள். பெரும்பாலான ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாநில போலீசாருடன் சுமார் 25 ஆயிரம் துணை நிலை ராணுவத்தினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள். முக்கிய தொகுதிகளில் 4 அடுக்கு பாதுகாப்பு இருக்கும்.

ஓட்டுச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தூரத்துக்குள் வாகனங்களில் வரதடை விதிக்கப்பட்டுள்ளது. வெளியூர் நபர்களால் பிரச்சினை ஏற்பட்டு விடாமல் இருக்க நேற்றிரவு முதல் திருமண மண்டபங்கள், விடுதிகள், சமூக நலக் கூடங்களில் சோதனை நடந்து வருகிறது.

பூத்சிலிப் கிடைக்காதவர்கள் ஓட்டுச்சாவடிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 234 தொகுதிகளிலும் மொத்தம் 2 லட்சத்து 88 ஆயிரம் பேர் பணிகளில் ஈடுபடுவார்கள். அவர்கள் அனைவரும் இன்றே தங்களுக்குரிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

நாளை மாலை 5 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிவடையும். அதன் பிறகு மின்னணு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்புடன் வைக்கப்படும். அடுத்த மாதம் (மே) 13ந் தேதி ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.

No comments: