ஏப்ரல் 12, தமிழக மக்கள் வாக்குகள் மூலம் அமைதி புரட்சி உருவாக்க வேண்டும் என்று வாக்காளர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்கள் நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.
கடந்த 2 மாதங்களாக இந்த தேர்தல்களில் வெற்றி பெற அயராது உழைத்தோம். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கூடி தங்கள் எழுச்சியைக் காட்டினர். மக்கள் மனப்பூர்வமாக நம்மை ஏற்றுக்கொண்டிருப்பதையே இந்த நிகழ்ச்சிகள் எடுத்துக்காட்டுகின்றன.
ஆர்வம்மிக்க இளைஞர்களும், குடும்பத்தை நடத்த தவிக்கின்ற தாய்மார்களும், பெரியோர்களும் இன்றைய ஆட்சியில் மாற்றம் தேவை என்பதை உணருகின்றனர்.
இந்த தேர்தல் மூலம் ஒரு புதிய வரலாறு படைக்க வேண்டும். அ.தி.மு.க., தே.மு.தி.க., மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் நமது அணியில் இடம் பெற்றுள்ள இதர கட்சிகள் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் வெற்றியாளர்களாக ஆக்கித்தருவது மக்கள் கையில் உள்ளது.
மக்களோ மாற்றத்தை காண விரும்புகின்றனர். அந்த மாற்றத்திற்கு வடிவம் தரவேண்டியது நமது தோழர்கள் கையில் உள்ளது. ஆகவே மக்களை இடைவிடாது அணுகி வாக்குப்பதிவு செய்யும் கடமையில் கண்ணும், கருத்துமாக இருக்க கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்களும் வாக்கு சீட்டுகள் மூலம் ஒரு அமைதிப் புரட்சியை உருவாக்கிட வேண்டுகிறேன். இவ்வாறு விஜயகாந்த் அறிக்கையில் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment