Apr 7, 2011

போலி அரசியல்வாதிகளும்!! அவர்களது வாக்குறுதிகளும்!!

ஏப்ரல் 7, யானையைப் பிடிப்பேன் பூனையைப் பிடிப்பேன் என்று அள்ளி விடும் இவர்களின் உண்மையான யோக்கியதை என்ன? வாய்க்கு வந்ததையெல்லாம் வாரிவிடும் இவர்களின் யோக்கிதை என்னவென்று பார்ப்போம்.

கடலில் கொல்லப்படும் தமிழக மீனவர்கள் குறித்து இந்த கட்சிகள் ஒப்பாரி வைக்கின்றன. ஆனால் எவரும் தாம் ஆட்சிக்கு வந்தால் தனிப்படை அல்லது போலீசு மூலம் மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கவில்லை. அதற்கு அவர்களுக்கு அதிகாரம் கிடையாது.

மாணவர்களுக்கு இலவசமாய் முட்டை போடுவோம் என்று சொல்லும் இவர்கள் அரசுப் பள்ளிகளை நவீனமாக விரிவுபடுத்தி உலகத் தரமான கல்வியை அரசாங்கமே தரும் என்று சொல்ல முடியவில்லை.

நோயாளிகள் தனியாருக்குச் சொந்தமான நட்சத்திர மருத்துவமனைகளில் சிகிச்சை பெற காசு கொடுப்போம் என்று சொல்லும் இவர்கள் அரசு மருத்துவமனைகளைத் தனியார் நட்சத்திர மருத்துவமனைகளை விட நவீனமான வசதிகள் கொண்டதாக மாற்றுவோம் என்று சொல்ல முடியவில்லை.

இலவசமாய் அரிசி கொடுப்பேன் என்று சொல்ல முடிந்த இவர்களுக்கு அரிசியை காசு கொடுத்து வாங்கும் அளவுக்கு பொருளாதார வளர்ச்சியை பரவலாக்குவோம் என்று சொல்ல முடியவில்லை.

நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தருவோம் என்று ஆரவாரமாக அறித்த கருணாநிதியால் அத்திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை, அதே நேரம் பன்னாட்டுத் தொழில் சாலைகளுக்கு மனம் கோணாமல் அவர்கள் விரும்பும் இடத்தில் விரும்பும் அளவுக்கு நிலத்தைக் கையகப்படுத்திக் கொடுக்க முடிகிறது.

விவசாயிகள் வளம் பெற உழவர் சந்தைகள் அமைத்தோம் என்று கருணாநிதி தனது குடும்பத் தொலைக்காட்சிகளில் ஆரவாரமாக பிரஸ்தாபிக்கிறார். ஆனால், இங்கே விவசாயமே அழிந்து போயிருக்கிற நிலையில், விதைக்கும் உரத்துக்கும் ஏகபோக பன்னாட்டு நிறுவனங்கள் விதிக்கும் இமாலய விலையின் முன் விவசாய்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.

விவசாயப் பொருட்களின் வினியோக சந்தை என்பது ரிலையன்ஸ், ஐ.டி.சி போன்ற உள்ளூர் தரகு முதலாளிகள் கையிலும் பன்னாட்டு ஊகபேர வர்த்தகச் சூதாடிகள் கையிலும் இருந்து கொண்டிருக்கும் போது கருணாநிதியோ விவசாய சந்தை திறந்தேன் என்கிறார்.

No comments: