Apr 7, 2011

திருச்சி பஸ்ஸில் 5 கோடி பணம்!! பரபரப்பு!!

ஏப்ரல் 7, திருச்சியில் பிடிபட்ட அந்த 5 கோடி பணம் பற்றி பெரும் பரபரப்பா இருக்கும் நிலையில் அந்த பணம் என்னோடது! ஆனா கணக்கு கிடையாது! என்று கூறியிருக்கிறார் பேருந்தின் உரிமையாளர் உதயகுமார்.

திருச்சியில் நேற்று முன்தினம் தனியார் ஆம்னி பஸ் ஒன்றின் மேற்கூரையில் 5 பேக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.5 கோடியே 11 லட்சத்து 27 ஆயிரம் பணத்தை திருச்சி மேற்கு சட்டசபை தேர்தல் நடத்தும் அதிகாரி டாக்டர் சங்கீதா பறிமுதல் செய்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை கண்டோன்மெண்டில் உள்ள ஸ்டேட் வங்கியில் அதிகாரிகள் செலுத்தினர். தேர்தல் நேரத்தில் மிகப்பெரிய தொகை பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வருமான வரித்துறை மூலம் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக டிராவல்ஸ் உரிமையாளர் உதயகுமரன், அவரது மகன் அருண் பாலாஜி, மேலாளர் பாலு ஆகிய 3 பேரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பஸ்சில் பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததா? யாருடைய பணம், எதற்காக வைக்கப்பட்டிருந்தது? என துருவி, துருவி விசாரணை நடத்தினர்.

மேலும் சம்பவத்தன்று தேர்தல் நடத்தும் அதிகாரி சங்கீதா பணத்தை பறிமுதல் செய்தபோது அங்கு காரில் வந்த 4 பேர் தப்பியோடினர். அவர்கள் யார்? பணம் யாருக்குரியது என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரனையில் எம்.ஜே.டி. உரிமையாளர் உதயகுமார், ‘’அந்த 5 கோடி பணமும் என்னோடதுதான். என்கிட்ட இன்னும் 20 கோடி இருக்கு. ஆனா எல்லா பணத்துக்கும் என்கிட்ட கணக்கு கிடையாது.

நான் 8வது வரைக்கும்தான் படிச்சிருக்கிறேன். அதனால் கணக்கு வச்சிக்கிறது கிடையாது. இதுவரை இன்கம்டாக்ஸ் கட்டாம இருந்தேன். எல்லோரும் சொன்னாங்க. நீ ஒரு நாள் மாட்டப்போறேன்னு. அது போல இப்ப நான் நல்லா வசமா மாட்டிக்கிட்டேன்.

ரியல் எஸ்டேட்டுக்கு டோக்கன் அட்வான்ஸ் கொடுக்கத்தான் இந்த 5 கோடியை எடுத்துக்கிட்டு மெட்ராஸ் போனேன். எலக்‌ஷன் நேரமா இருக்குறதுனாலதான் என்னோட பஸ்சுலேயே டாப்ல கட்டிப்போட்டு எடுத்துக்கிட்டு போனேன்’’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

No comments: