Mar 16, 2011

சம்பளம் வாங்காமல் வேலை செய்யும் உளவாளி இன்டர்நெட் !!!

லண்டன் : "உலகம் இதுவரை கண்டிராத அளவிற்கு இன்டர்நெட் ஒரு உளவு இயந்திரமாக செயல்படுகிறது' என, விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் புகழாரம் சூட்டியுள்ளார். அமெரிக்காவுடனான சர்வதேச நாடுகளின் தூதரக ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச்.

சுவீடன் பெண்கள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக இவர் மீது, லண்டன் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக மாணவர்களிடையே அசாஞ்ச் பேசியதாவது. இன்டர்நெட் குறிப்பாக, பேஸ்புக் போன்ற சமூக இணையதளங்கள், ரகசியங்களை திரட்ட, அரசுகளுக்கு நல்ல வாய்ப்பு அளிக்கின்றன. மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பே, கெய்ரோவில் பேஸ்புக் புரட்சி வெடித்து இருக்க வேண்டும். முக்கிய பங்கேற்பாளர்களை திரட்ட, பேஸ்புக் உதவியாக இருந்தது. இதன் பின்னர் இவர்கள் அடிக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

அரசாங்கம் என்ன செய்கிறது என்பதை தெரிவிக்கும் திறன், இன்டர்நெட்டுக்கு உள்ளது. உலகம் இதுவரை கண்டிராத அளவிற்கு, இன்டர்நெட் ஒரு உளவு இயந்திரமாக செயல்பட்டு வருகிறது. கொடுங்கோல் ஆட்சிகளை அழிக்க தொழில்நுட்ப வளர்ச்சி உதவுகிறது. பேச்சு சுதந்திரத்துக்கோ அல்லது மனித உரிமைக்கோ தொழில்நுட்பம் ஆதரவானது இல்லை. அரசாங்கங்களை உளவு பார்க்க உதவக் கூடியது. அரபு நாடுகளில் எழுந்துள்ள புரட்சிக்கு என்னுடைய இணையதளம் உதவியாக இருந்தது. அமெரிக்க தூதரக அதிகாரிகளின் ஆவணங்கள் வெளியானது மூலம் டுனீசியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இவ்வாறு அசாஞ்ச் பேசினார்.

டில்லியில் உள்ள இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகத்தில் இருந்து பரிமாறப்பட்ட தகவலில், "கேரளா மாபியா' பிரதமர் அலுவலகத்தில் சுறுசுறுப்பாக இருக்கிறார்' என்று, விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியாகி இருந்தது. இதற்கு முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், "நாங்கள் கேரளா மாபியாக்கள் அல்ல. அமெரிக்கர்கள் கூறுவதை நாங்கள் கேட்க வேண்டியது இல்லை' என்று, சபரிமலை சென்றிருந்த போது, கேரள "டிவி' சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

No comments: