Mar 17, 2011

ஜெ. கொடும்பாவி எரிப்பு!! தமிழக அரசியலில் பரபரப்பு!!

நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் இரு அணிகள்தாம் என நம்பிய தமிழக வாக்காளர்களின் எதிர்ப்பார்ப்பை வீணாக்கிவிட்டு 3-வது அணியை உருவாக்க ஜெயலலிதா காரணமாக அமைந்து விட்டார். தமிழக அரசியலில் தற்போதைய பரபரப்பிற்கு காரணம் அ.இ.அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் செல்வி. ஜெயலலிதாதான்.

தி.மு.க ஆட்சியை அடுத்தமுறை வரவிடக் கூடாது என்பதற்காகவும், தான் அடுத்த முதல்வராக அரியாசனம் ஏற வேண்டுமென்பதற்காகவும் நீண்ட நாட்களாக ஆலோசனைச் செய்து வலுவான கூட்டணியை உருவாக்கினார் அவர். இரண்டு கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க ஆகியன ஏற்கனவே ஜெ.வுடன் இருந்த பொழுதிலும் அவற்றின் செல்வாக்குக் குறித்து ஜெ.வுக்கு தெரியுமென்பதால், சமீபத்தில் முதல்வர் கனவில் களமிறங்கி மக்களும், தெய்வமும்தான் எனது கூட்டணி என தம்பட்டம் அடித்த விஜயகாந்தை தனது கூட்டணிக்குள் லாவகமாக கொண்டுவந்தார். ம.ம.க உள்பட இன்னும் சில சிறிய கட்சிகளையும் அரவணைத்துக் கொண்டார்.

இந்நிலையில் நேற்று அதிரடியாக அ.இ.அ.தி.மு.கவின் வேட்பாளர் பட்டியலை அறிவித்தார் அவர். ம.தி.மு.கவிற்கு இடமில்லை எனக்கூறி வெளியேற்றி கடை நேரத்தில் கழுத்தை அறுத்தவர், இம்முறை கூட்டணி கட்சியினருக்கு சாதகமான தொகுதிகளையெல்லாம் தனதாக்கிக் கொண்டார். ஏற்கனவே தொகுதிகளின் எண்ணிக்கையில் இழுபறியில் ஈடுபட்ட கம்யூனிஸ்டுகள் தாங்கள் விரும்பாத தொகுதிகள் ஒதுக்கப்பட்டதைப் பார்த்து கொதித்துப் போனார்கள்.

இந்நிலையில் மூக்கறுக்கப்பட்ட அ.இ.அ.தி.மு.க கூட்டணிக் கட்சிகள் தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், பார்வர்ட் பிளாக், மூவேந்தர் முன்னணிக் கழகம் ஆகியன தே.மு.தி.க கட்சி அலுவலகத்தில் இன்று காலை சுமார் ஒரு மணிநேரம் ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனைக் கூட்டத்திற்கு நிருபர்களிடம் பேட்டியளித்த விஜயகாந்த், நாளைக்குத்தான் எதையும் கூற முடியும். அனைத்துத் தலைவர்களுடனும் பேசிய பிறகுதான் முடிவெடுக்க முடியும். நாளை வரை பொறுத்திருங்கள், நானே கூப்பிட்டுச் சொல்கிறேன். அவசரப்பட்டு எதையும் சொல்ல முடியாது என்றார்.

இதற்கிடையே இன்று காலை தே.மு.தி.கவின் அலுவலகத்தில் திரண்டிருந்த அக்கட்சியின் தொண்டர்கள் ஜெயலலிதாவை விமர்சித்து கோஷமிட்டதுடன், அவருடைய கொடும்பாவியையும் எரித்தனர். கொடுத்த வாக்கை மீறுவதையும், கடைசி நேரத்தில் காலை வாருவதையும் வழக்கமாகக் கொண்ட ஜெயலலிதா தனது கூட்டணிக் கட்சியினரை ரொம்பவே படுத்திவிட்டார் என தமிழக வாக்காளர் பெருமக்கள் கருதுகின்றனர். இந்நிலையில், அ.இ.அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்துள்ள மனிதநேய மக்கள் கட்சி மற்றும் சரத்குமாரின் கட்சி ஆகியன தொகுதிகள் ஒதுக்கீடுக் குறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை

No comments: