வாஷிங்டன், ஜன.26: கல்வி, அறிவியல் ஆராய்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் நாம் கவனம் செலுத்தாமல் போனால் இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளிடம் நாம் தோற்றுப்போவோம் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா எச்சரித்தார். "சமாதானமும் செழிப்பும் மிக்க உலகைப் படைக்க இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளுடன் நெருக்கமாகச் செல்ல முடிவெடுத்து அந்த நாடுகளுக்கு நான் சமீபத்தில் சென்று திரும்பியுள்ளேன். இவ்விரு நாடுகளும் தங்களிடம் உள்ள மனித ஆற்றலை கல்வி, சுகாதாரம், அறிவியல் - தொழில்நுட்ப ஆராய்ச்சித் துறைகளில் வெற்றிகரமாக திருப்பிவிட்டுள்ளன. எனவே மேற்கத்திய நாடுகளும் இவ்விரு நாடுகளின் சேவையைப் பெற்றே தீர வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.
அந்த நாட்டுக் குழந்தைகள் மிகச் சிறு வயதிலேயே பள்ளிக்கூடங்களில் சேர்க்கப்பட்டு முதுகலை மற்றும் ஆய்வுப் படிப்பு வரை கல்லூரி, பல்கலைக்கழகங்களில் தொடர்ந்து இடைவிடாமல் படிக்கின்றனர். இதனால் அங்கு கல்வியின் தரமும் கூடி வருகிறது.
கணிதம், அறிவியல் பாடங்களில் அமெரிக்க மாணவர்கள் அக்கறை காட்டுவது குறைந்து வருவது கவலை தருகிறது. இந்தப் பதின் ஆண்டுகள் முடிவதற்குள் கணிதம், அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கற்றுத்தர ஒரு லட்சம் ஆசிரியர்களை அமெரிக்காவில் உருவாக்குவதே என்னுடைய லட்சியம்.2.5 லட்சம் வேலை வாய்ப்புகள்: சீனாவுக்கும் இந்தியாவுக்கும் சென்றபோது அந்த நாட்டின் தொழில், வர்த்தகத்துறையினருடன் பேசி அமெரிக்காவில் புதிதாக 2.5 லட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படும் வகையில் ஒப்பந்தங்களைச் செய்து வந்திருக்கிறேன்.
நாட்டின் பாதுகாப்பு (ராணுவம்), மருத்துவ சேவை, சமூக பாதுகாப்பு ஆகிய துறைகளைத் தவிர பிற துறைகளில் அரசு செய்யும் வீண் செலவுகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்படும். ஆப்கனிலிருந்து ஜூலையில் விலகுவோம்: ஆப்கானிஸ்தானிலிருந்து ஜூலை மாதத்தில் அமெரிக்கப் படைகள் திரும்பும். அல் காய்தா, தலிபான்களுக்கு ஆப்கானிஸ்தானில் செல்வாக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதுதான் நம்முடைய நோக்கம். தாக்க திட்டம்: அமெரிக்காவின் கேந்திரப் பகுதிகளைத் தாக்கி நாசப்படுத்த அல் காய்தா இன்னமும் திட்டமிட்டு வருகிறது என்பதால் அரசும் மக்களும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.
சட்டவிரோத குடியேற்றம்: சட்டவிரோத குடியேற்றம் குறித்து நாம் திட்டமிட்ட முடிவுகளை எடுக்க வேண்டும். அதற்கு குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி இரண்டுமே தயாராக இருக்க வேண்டும். நம் நாட்டில் படித்து நம் நாட்டுக் கொடிக்கு விசுவாசம் தெரிவிக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களையும் மக்களையும் எப்போது வேண்டுமானாலும் வெளியேற்றிவிடுவோம் என்ற அச்சத்திலேயே நாம் தொடர்ந்து வைத்திருக்க வேண்டுமா என்பதை அனைவரும் சிந்தித்துப்பார்க்க வேண்டும்' என்றார் ஒபாமா.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment