1998ல் சங்பரிவார் பயங்கரவாதி தாராசிங், பாதிரியார் கிரஹாம் ஸ்டூவர்ட் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது இரு பச்சிளம் குழந்தைகளும் உயிரோடு எரிக்கப்பட்ட வழக்கில் கீழ் நீதிமன்றம் தாராசிங் மற்றும் 11 பேருக்கு மரண தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து தாராசிங் தரப்பு ஒரிஸ்ஸா உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்ததில் உயர்நீதி மன்றம் தாராசிங்கிற்கான மரண தண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைத்தும் இதர 11 பேரை விடுவித்தும் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் உயர்நீதிமன்றத்தின் அநீதியை உச்சநீதிமன்றமும் வழிமொழிந்துள்ளது நிச்சயம் வேதனைக்குரிய ஒன்றுதான்.
கிரஹாம் ஸ்டெயின்ஸ் பாதிரியார் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளை எரித்துக்கொன்ற கையோடு சபீக் ரஹ்மான் என்ற வியாபாரியையும் எரித்துக் கொன்றது தாராசிங் தலைமையிலான காவி தீவிரவாதக் கும்பல். இந்தக் கொடூரம் உலகமே அறிந்த ஒன்றுதான். ஆனால் நீதிமன்றமோ, ஸ்டெயின்ஸ் பாதிரியார் எரிக்கப்பட்ட சம்பவம் அரிதிலும் அரிதானதொரு சம்பவம் என்றது. சங்பரிவாரங்களுடன் தாராசிங்கிற்கு உள்ள தொடர்புகள் குறித்து ஆதாரங்கள் நீதிமன்றத்தின் முன்பு வைக்கப்பட்டன. ஆனால் இந்தப் படுகொலையில் எந்த அமைப்புக்கும் தொடர்பில்லை என்று கூறி, அந்தக் கொடிய பயங்கரவாதியைக் காப்பாற்ற முயன்று, அதன் பின்னணியில் உள்ள அமைப்புகளுக்கும் புனிதபட்டத்தினைக் கொடுத்துள்ளது.
2005ல் ஒரிஸ்ஸா உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு நீதியை எள்ளி நகையாடுவதைப் போன்றே உள்ளது. தாரா சிங்கின் மீது விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது. 11 பயங்கரவாதிகளும் விடுவிக்கப்பட்டனர்.
தாரா சிங்கின் கொடிய குற்றங்களுக்காக அவர் மீது மரணதண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும், ஆயுள் தண்டனை ரத்து செய்து விடுவிக்கப்பட்ட அனைவர் மீதும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் நோக்கி முறையீடு செய்த சி.பி.ஐ.யின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
கொடிய கொலைக் குற்றவாளி தாராசிங் வெறும் ஆயுள் தண்டனை மட்டுமே பெற்றுள்ள நிலையில் நீதி பரிபாலனத் துறையைக் கண்டு காவி பயங்கரவாதிகள் ஏளன சிரிப்பு சிரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பில் ‘அந்நிய மதமாற்றம் மலைசாதியினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியதால்தான் இந்தக்கொலை நடந்துள்ளது. ஒருவனை ஏமாற்றியோ, பொய் வாக்குறுதி கொடுத்தோ, பணம் கொடுத்தோ, அல்லது ஒருவன் சார்ந்திருக்கும் மதம் மோசமானது, எங்கள் மதமே உயர்ந்தது என மட்டமாகப் பேசியோ மதம் மாற்றுவது இறையாண்மைக்கு விரோதமானது’ என்றெல்லாம் கைதேர்ந்த சங்பரிவார் கொள்கை பரப்புச் செயலாளர் போன்றே நீதிபதி சதாசிவம் தீர்ப்பு வழங்கியுள்ளார். இது உச்சநீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள நாட்டு மக்களின் வேதனையை அதிகப்படுத்தி வருகிறது.
தாராசிங்கின் வாதங்களை நியாயப்படுத்தி இந்தியாவின் மதச்சார்பின்மை மாண்புகளை நிராகரிக்கும் இந்தத் தீர்ப்பு நிச்சயம் மெச்சத்தகுந்தது அல்ல. தாராசிங் திட்டமிட்டு படுகொலைகள் செய்கிறவன் என்பதும், காவி பயங்கரவாதிகளின் தலைவன் என்பதும் மறுக்க இயலாத அளவு நிரூபிக்கப்பட்டுள்ள போதும் அவற்றை நீதிமன்றம் ஏற்கவில்லை. அதே நேரத்தில் பினாயக் சென் போன்ற மனித உரிமைப் போராளிகளுக்கு அவர் அரசின் அயோக்கியத்தனத்தை அமைதி வழியில் தட்டிக் கேட்டார் என்பதற்காகவே அவருக்கெதிராகக் கொடுக்கப்பட்ட எல்லாமே பொய் ஆதாரங்கள் என்ற போதும் ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றமே இந்திய மக்களின் கடைசி நம்பிக்கையாக இருந்து வரும்நிலையில் இதுபோன்ற தீர்ப்புகள் நாட்டின் மதச்சார்பின்மை மாண்புகளுக்கும் அரசியல் சாசன நெறிகளுக்கும் நிச்சயம் பெருமை சேர்க்காது.
அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு அயோத்தி பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பாக வழங்கிய கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பினால் மனம் நொந்து போயுள்ள இந்திய மக்கள் நம்பிக்கை ஒளிக்கீற்றாக உச்சநீதிமன்றத்தையே நம்பியுள்ள நிலையில் ஒரிஸ்ஸா ஸ்டெயின்ஸ் பாதிரியார் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் கொடூரக் கொலையாளி தாராசிங் மீது மரண தண்டனை விதிக்கப்படாததோடு அவர் செய்த படுகொலை செயலையும் நியாயப்படுத்தும் அளவு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சென்றிருப்பது நீதி நாடும் மக்களை அதிருப்தியின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது. அதிருப்தியினைக் களைந்து நம்பிக்கை ஏற்படுத்துவது நீதித்துறையின் கடமை. என்ன செய்யப் போகின்றன மத்திய அரசும் உச்சநீதிமன்றமும் ?
நன்றி : அபுசாலிஹ்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நல்லதொரு சமூக அலசல்.....
Post a Comment