சென்னை,ஜுலை28:சென்னை நகரில் வரும் 31ம் தேதி முதல் சுத்திகரிக்கப்பட்ட கடல் குடிநீர் வினியோகம் தொடங்கவுள்ளது. சென்னை நகரின் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க, கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் சென்னையை அடுத்த மீஞ்சூர் காட்டுப்பள்ளியில் செயல்படுத்தப் பட்டுள்ளது. ரூ.400 கோடி செலவில் ஐ.வி.சி.ஆர்.எஸ். நிறுவனமும் ஜெர்மன் நாட்டு பெப்சோ நிறுவனமும் இணைந்து இதற்கான ஆலையை அமைத்துள்ளன.
இங்கு,கடல் நீரில் இருந்து தினமும் 100 மில்லியன் லிட்டர் குடிநீர் தயாரித்து சென்னை நகருக்கு வினியோகிக்கப்படவுள்ளது. இதன் கட்டுமான பணி 2007ம் ஆண்டு தொடங்கியது. இந்தப் பணிகள் முடிவடைந்ததையடுத்து அதன் சோதனை ஓட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது.
ஆலை அமைந்துள்ள காட்டுப்பள்ளியில் இருந்து சென்னைக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கொண்டு வர குடிநீர் வாரியம் மூலம் 35 கிலோ மீட்டர் தூரத்துக்கு பிரம்மாண்ட குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.இந்த நீரை தேக்கி வைக்க செங்குன்றம், மாதவரம் ஆகிய இடங்களில் பிரமாண்டமான மேல் நிலைத் நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.இந் நிலையில் இந்த குடிநீர் வினியோகத் திட்டம் வரும் 31ம் தேதி முதல்வர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்படவுள்ளது.
சென்னை நகருக்கு இப்போது பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், வீராணம் ஏரிகளில் இருந்தும்,ஆந்திராவின் கிருஷ்ணா நதி நீரும் வினியோகிக்கப்பட்டு வருகிறது.இப்போது கடல் குடிநீரும் சப்ளையாகவுள்ளதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு பெருமளவு குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
40 வருடத்துக்கு பின் 750 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு: இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கோட்டூர்புரம் பாரதி அவென்யூ, மாந்தோப்பு காலனி பகுதியைச் சேர்ந்த 750 குடும்பத்தினருக்க 40 ஆண்டுகளுக்குப் பின் இப்போது குடிநீர் இணைப்பு தரப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் குடியிருப்புகள் உருவாகி 40 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. ஆனால் இதுவரை குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை வசதிகள் செய்து தரப்படவில்லை. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்நிலையில் தற்போது மாநகராட்சி சார்பில் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.ரூ.34 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கழிவு நீரோற்று நிலையத்தை மேயர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment