கடந்த ஒரு மாதமாக காஷ்மீரில் மக்கள் போராட்டம் அடக்குமுறைக்கு அஞ்சாமல் தீவிரமாக நடைபெறுகிறது. கடந்த 23 நாட்களில் மட்டும் பதினைந்து மக்கள் போலீசின் துப்பாக்கி சூட்டினால் கொல்லப்பட்டுள்ளனர். இதில் நேற்று மட்டும் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியாவின் இந்த அடக்குமுறை காஷ்மீருக்கு புதிதல்ல.
ஏப்ரல் 30ஆம் தேதி எல்லைக்கோட்டுக்கு அருகில் அமைந்துள்ள மச்சீல் செக்டர் எனும் பகுதியில் ஒரு வீட்டை சுற்றி வளைத்த இந்திய ராணுவம் அப்பாவி மக்கள் மூவரை சுட்டுக் கொன்றது. ஆரம்பத்தில் இவர்கள் மூவரும் பாக் தீவிரவாதிகள் என்ற கட்டுக்கதை பரப்பப்பட்டது. பின்னர்தான் இவர்கள் ரபியாபாத் பகுதியிலிருந்து கடத்தி வரப்பட்ட அப்பாவிகள் என்பதும், பதவி உயர்வுக்காக ராஜ்புத் ரைஃபிள்ஸ் 4 படையின் ராணுவ மேஜர் உத்தரவின் பேரில் அவர்கள் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டதும் தெரிய வந்தது.
மக்கள் போராட்டத்தால் இந்த கொலை பின்னர் அரசாலேயே ஏற்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட வீரர்கள்,ஆள்காட்டிகள் எல்லாரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.இந்தப் படுகொலையின் சூத்திரதாரியான மேஜர் உபேந்தர் தலைமறைவாகிவிட்டார்.இதன் பின்னர் ஜூன் 11ஆம் தேதி பாராமுலா, ஸ்ரீநகரில் நடந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் போலீசு நடத்திய துப்பாக்கி சூட்டில் பள்ளி மாணவன் துஃபைல் கொல்லப்பட்டார்.
ஜூன் 25ஆம் தேதி சுபோரில் மீண்டும் ராணுவம் நடத்திய போலி என்கவுண்டரில் இரண்டு அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இவர்களது உடல்களை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது சி.ஆர்.பி.எஃப் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இர்ஷத் அகமத் என்ற ஒன்பது வயது சிறுவன் கொல்லப்பட்டான்.
இதைக் கண்டித்து ஹூரியத் மாநாடு உட்பட பல அமைப்புகள் வேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்புப் போராட்டங்களை நடத்தின. இதிலும் துப்பாக்கி சூடு நடந்தது. மீர்வாஜ் உமர் ஃபாரூக் உட்பட பல ஹூரியத் தலைவர்கள், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் போன்றோரை காஷ்மீர் அரசு பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டததில் கைது செய்து இருக்கிறது. ஆனாலும் மக்கள் போராட்டம் நிற்கவில்லை.
போராட்டம் வீச்சாக நடைபெறுவதைக் கண்டு அஞ்சிய அரசு கடந்த ஒரு வாரமாக ஊரடங்கு உத்தரவை பல பகுதிகளில் அறிவித்து அடக்கி வருகிறது. ஆனாலும் ஊரடங்கு உத்திரவை மீறி மக்கள் தெருக்களில் இறங்கி துணிச்சலுடன் போராடிவருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் போலீசின் துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டதோடு 70பேர் படுகாயம் அடைந்திருக்கின்றனர்.
இப்போது போலீசுக்கு துணையாக இராணுவத்தை இறக்கவும் அரசு முனைந்திருக்கிறது. காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லாவும், மத்திய உள்துறை அமைச்சரும் இந்த போராட்டங்கள் பாக் ஆதரவு தீவிரவாதக் குழுக்களால் தூண்டிவிடப்படுவதாக கூசாமல் புளுகி வருகின்றனர். கொல்லப்பட்ட அப்பாவிகளின் உயிரை மயிர் போல அலட்சியப்படுத்துவதற்காக இப்படி திசை திருப்ப முயல்கின்றனர்.
ஐந்து இலட்சம் இராணுவத்தினர், பல்லாயிரம் மத்திய துணை இராணுவ போலீசார்.. என காஷ்மீர் முழுவதும் இந்திய அரசின் பயங்கரவாத இராணுவம்தான் கடந்த இருபது ஆண்டுகளாக ஆட்சி செய்கிறது. இதை அறுவடை செய்ய நினைக்கும் பாக் அரசின் ஆதரவு பெற்ற தீவிரவாதக் குழுக்களும் காஷ்மீரில் இயங்கி வருகின்றன. ஆனால் இந்த பகடையாட்டத்தை புறந்தள்ளி காஷ்மீர் மக்கள் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
கடந்த இரு பத்தாண்டுகளாக காஷ்மீரின் இளைய சமுதாயம் இந்த போராட்டத்தினூடாகவே வளர்ந்து வருகிறது. “இந்தியாவே காஷ்மீரை விட்டு வெளியேறு” என்ற முழக்கம் காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ஓங்கி ஒலிக்கிறது.துப்பாக்கிச்சூட்டில் பலியான உடல்களைக் கண்டு மக்கள் அஞ்சவில்லை. உடல்களை ஆயுதமாக்கி அரசியல் எழுச்சியை உருவாக்கி வருகின்றனர். ஆப்பசைத்த குரங்காய் இந்திய இராணுவம் மேலும் மேலும் அம்பலப்பட்டு வருகிறது.இருபது, முப்பது ஆண்டுகளாக இந்திய ராணுவத்தின் துப்பாக்கி நிழலில்தான் காஷ்மீர் மக்கள் வதைபட்டு வாழ்கின்றனர்.
துப்பாக்கியின் பயங்கரவாதத்தை எதிர்கொண்டு வாழும் அவர்களது அன்றாட வாழ்க்கை சொல்லணாத் துயரம் கொண்டது. வீட்டை விட்டு வெளியே வந்தால் ஆயிரத்தெட்டு சோதனைச் சாவடிகள், விசாரணைகள் என்று தினமும் அரசு பயங்கரவாதத்தின் ஆட்சியில்தான் காலம் தள்ளி வருகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட பிறகும் காஷ்மீர் அடிபணியவில்லை.
சுதந்திரத்தின் தாகம் கொண்டு நெருப்பிலிருந்து வரும் பீனிக்ஸ் பறவை போல அந்த போராட்டம் மீண்டும் மீண்டும் எழுந்து வருகிறது.துணைக்கண்டத்தில் மிகப்பெரிய இந்திய ராணுவத்தை எதிர்கொண்டு காஷ்மீர் மக்கள் நடத்தும் இந்த போராட்டம் ஒரு காவியம் போல காலத்தை வென்று வருகிறது.
வினவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment