Jun 29, 2010

ஒரிசா கந்தமால் மதக் கலவரம்: தீவிரவாத பாஜக எம்எல்ஏவுக்கு 7 ஆண்டு சிறை.

புவனேஸ்வர்: ஒரிஸ்ஸா மாநிலம் கந்தமாலில் மதக் கலவரத்தைத் தூண்டிவிட்டதாக பாஜக எம்.எல்.ஏ. மனோஜ் பிரதானுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கந்தமாலில் கடந்த 2008ம் ஆண்டு கிருஸ்துவ மதத்திற்கு மாறியவர்கள் மீது தாக்குதல் நடந்தது. இந் நிலையில் அவர்களை மீண்டும் இந்து மதத்துக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்ட விஸ்வ இந்து பரிஷத் தலைவர் சுவாமி லட்சுமணானந்தா சரசுவதி கொல்லப்பட்டார். அவரை தாங்களே கொன்றாக நக்ஸல்கள் அறிவித்தனர்.

ஆனால், அவரை கிருஸ்துவர்கள் தான் கொலை செய்ததாகக் கூறி தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 4,600 வீடுகளும் 150 தேவாலயங்களும் எரிக்கப்பட்டன.
2 மாதம் நடந்த இந்த தொடர் மதக் கலவரத்தில் 43 பேர் இறந்தனர். ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். மத்திய படைகள் அனுப்பப்பட்டு அங்கு அமைதி நிலைநாட்டப்பட்டது.

இந்த மதக் கலவரம் தொடர்பாக பலர் மீது வழக்குகள் தொடரப்பட்டன.புதேதி என்ற கிராமத்தில் மதம் மாறிய தலித் கிருஸ்துவரான பரிகிதா நாயக் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் பாஜக எம்.எல்.ஏ. மனோஜ் பிரதான் (37) மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த காந்தமால் மாவட்ட விரைவு நீதிமன்றம் மனோஜுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது. கலவரத்தையடுத்து மனோஜ் மீது வீடுகளுக்குத் தீ வைத்தது, 7 கொலை வழக்குகள், 7 வன்முறையைத் தூண்டிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து 2008ம் ஆண்டு கைது செய்யப்பட்ட இவர், சிறையில் இருந்தபடியே உதய்கிரி தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

No comments: