Oct 2, 2009

காஷ்மீர் மக்களுக்கு தனி விசா: சீனாவிடம் இந்தியா கடும் எதிர்ப்பு


காஷ்மீர் இந்தியாவை சேர்ந்தது இல்லை என்று குறிப்பிடும் வகையில் காஷ்மீர் மக்களுக்கு தனி விசாவை சீனா வழங்குவதற்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
சீனாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு தில்லியில் உள்ள சீனத் தூதரகம் விசா வழங்கி வருகிறது. ஆனால் அண்மைக்காலமாக சீனா செல்லும் காஷ்மீர் மாநிலத்தவருக்கு மட்டும் சீனத் தூதரகம் தனியாக விசா வழங்கி வருவது தெரியவந்துள்ளது.

வழக்கம்போல் பாஸ்போர்ட்டில் விசா வழங்காமல் தனி பேப்பரில் விசா வழங்கி வருகிறது சீனத் தூதரகம். காஷ்மீர் இந்தியாவின் பகுதி அல்ல; காஷ்மீர் மக்கள் இந்தியர்கள் அல்ல என்பதை மறைமுகமாகச் சொல்லும் வகையில் இவ்வாறு செய்வதாகக் கருதப்படுகிறது.

அருணாசலப் பிரதேசத்திலிருந்து சீனா செல்லும் இந்தியர்களுக்கும் இதேபோன்று தனி பேப்பரில் விசா வழங்கி வருகிறது சீன அரசு. அருணாசலப் பிரதேசம் இந்தியாவின் பகுதி என சீனா இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தனி விசா வழங்குவதற்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இன ரீதியிலோ அல்லது பிராந்திய ரீதியிலோ இந்தியப் பிரஜைகளுக்கிடையே பாகுபாடு பார்க்கக் கூடாது என்று சீனாவிடம் இந்தியா கூறியுள்ளது.

இதுகுறித்து தில்லியில் உள்ள சீனத் தூதரகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது என்று வெளியுறவு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய எல்லைப் பகுதியை சீனா கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. காஷ்மீர் எல்லைப் பகுதியில் சீன விமானங்கள் அத்துமீறி பறந்ததாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில் காஷ்மீர் மாநில பிரஜைகளுக்கு சீனா தனியாக விசா வழங்குவது இந்தியாவுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக கண்டனம்: காஷ்மீர் மக்களுக்கு அவர்களது பாஸ்போர்ட்டில் விசா வழங்காமல் தனி பேப்பரில் விசா வழங்கும் சீனாவின் நடவடிக்கைக்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது மிகவும் தீவிரமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மெத்தனமாகச் செயல்படுவது வருந்ததக்கது என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.உடனடியாக சீன அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று தனி விசா கொடுப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

No comments: