Dec 7, 2014

இது முடிவல்ல தொடர்கதை!

டிசம்பர் 06/2014: சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிகப்பெரிய துயரங்களில் ஒன்று  பாபரி மஸ்ஜித் இடிப்பு. 
 தொடர் வன்முறைகள் மூலம் நாட்டை சுடுகாடாக மாற்றி பாபரி மஸ்ஜிதை இடித்து, அதன் மூலம் இந்தியாவின் பாரம்பரியத்தை இடித்து தள்ளியவர்கள் இன்று நாட்டின் அதிகாரத்தில் இருக்கின்றனர்.
நிரபராதிகளின் இரத்தத்தின் மூலம் ஹோலியை கொண்டாடிய ரதயாத்திரையின் நாயகன் எல்.கே.அத்வானி, அரசியலில் செல்லாக்காசாக ஆக்கப்பட்ட போதிலும், அத்வானியை விட தீவிர இந்துத்துவத்திற்கு கச்சிதமாக பொருந்தக்கூடிய நரேந்திர மோடிதான் இன்று இந்தியாவின் பிரதமராக உள்ளார். பாபரி மசூதி குறித்த  நினைவலைகளில் கொடிய சதிகள்தாம் நிறைந்துள்ளன.
1949 ஆம் ஆண்டு டிசம்பர் 22-ஆம் தேதி நள்ளிரவில் மஸ்ஜிதிற்குள் சிலையை வைத்தது முதல் கொடிய சதிகளின் அரங்கேற்றம் துவங்குகிறது. செய்தியை கேட்ட உடனே மஸ்ஜிதில் இருந்து சிலைகளை அகற்ற பிரதமர் ஜவஹர்லால் நேரு உத்தரவிடுமளவிற்கு இந்தியாவின் ஜனநாயக- மதச்சார்பற்ற விழுமியங்கள் அன்று உயிரோடு இருந்தது. அதேநேரம் நேருவின் உத்தரவை நடைமுறைப்படுத்த முடியாத அளவிற்கு இந்துத்துவ வகுப்புவாதமும் வலுவாக இருந்தது.
நேரு அன்றைய உ.பி. முதல்வர் கோவிந்த பலாஹ் பந்துவிற்கு சிலையை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு எழுதிய அவசரக் கடிதத்தில் இவ்வாறு சுட்டிக் காட்டியிருந்தார்.”மிகவும் ஆபத்தான முன்மாதிரி ஒன்று அங்கே நடத்தப்பட்டுள்ளது. அது மிகவும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று நேரு குறிப்பிட்டிருந்தார். ”நேரு கூறியது முற்றிலும் சரியே. அந்த ஆபத்திலிருந்து நாட்டையும், மக்களையும் காப்பாற்ற நேருவாலோ, அவரது கட்சியாலோ இயலவில்லை.

உயர்சாதியினர் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக  வன்முறை அடிப்படையிலான  இந்துத்துவ உணர்வும், பிற மதங்களின் மீதான துவேசமும். குறிப்பாக முஸ்லிம்கள் மீதான துவேசமும் ஊட்டி வளர்க்கப்பட்டது. பாபரி மஸ்ஜித் அவர்களுக்கு நல்லதொரு இரையாக மாறியது. தொடர்ந்து பொய்களை பரப்புரைச் செய்தும், கலவரங்களை ஏற்படுத்தியும், ரதயாத்திரைகளை நடத்தியும் முன்னேறினர் RSS  இந்துத்துவானர்.

அரசும், மதச்சார்பற்ற கட்சிகளும் அவர்களுக்கு ஆதரவு அல்லது மெளனமான பார்வையாளர்கள் என்ற நிலையிலேயே இருந்து வந்தனர். பிரதமரின் உத்தரவு வந்த பிறகும் பாபரி மஸ்ஜிதில் இருந்து சிலைகள் அகற்றப்படவில்லை. அங்கே முஸ்லிம்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதோடு, வக்ஃப் நிலத்தில் பூஜைக்கான வசதியும் செய்து தரப்பட்டது. மிதவாத இந்துத்துவம் கைவசம் இருப்பது நல்லதுதான் என்று தவறாக புரிந்து கொண்ட ராஜீவ் காந்தி, 1986-ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜிதின் வாசல்களை பூஜைக்காக திறந்து விட்டார். அதன்பிறகு நடந்த தொடர் கலவரங்களும், இந்திய அரசியல் சாசனத்திற்கும், சட்டங்களுக்கும் சவால் விடுத்தது. 

இறுதியாக ஆயிரக்கணக்கான குற்றவாளிகள் சேர்ந்து பாபரி மஸ்ஜிதை முற்றிலுமாக இடித்துத்து தள்ளினர். இங்கே இடிக்கப்பட்டது ஒரு கட்டிடம் மட்டுமல்ல. இந்தியாவின் மதச்சார்பின்மை, அரசு மற்றும் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையும்தான். அதிகாரிகளின் வாக்குறுதிகளும், நீதிமன்றங்களின் எச்சரிக்கைகளும் வீணாயின. பாபரி மஸ்ஜித் அதே இடத்திலேயே புனர் நிர்மாணிக்கப்படும் என்ற அன்றைய பிரதமர் நரசிம்மராவின் வாக்குறுதி கொடிய சதிகளின் மூலமாக அமைந்தது. பிற்காலத்தில் நரசிம்மராவ் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மறைமுக உறுப்பினர் என்பது வெளிச்சத்திற்கு வந்தது. 
மஸ்ஜிதை இடித்தவர்கள் யார்? என்ற கேள்விக்கு சின்னஞ்சிறு குழந்தை அனைத்து இந்தியர்களுக்கு பதில் தெரிந்திருந்தது. எனினும், எந்தவொரு குற்றவாளியும் விசாரணைச் செய்யப்படவில்லை, சிறையிலும் அடைக்கப்பட வில்லை. ஆறு மாதங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்ட லிபர்ஹான் கமிஷன், 17 வருடங்களை எடுத்துக் கொண்டது. அவ்வளவு நாட்கள் எடுத்து வெளிவந்த அறிக்கை இதுவரை வெளிச்சம் காணாமல் இருண்ட பீரோவுக்குள் தூங்கிக்கொண்டிருக்கிறது.

வழக்கை விசாரித்த சி.பி.ஐயோ சங்க்பரிவார் தலைவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்குவதில் ஆர்வம் காட்டியது. மசூதி குறித்த அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்சின் தீர்ப்போ இந்திய நீதித்துறை வரலாற்றில் விசித்திரமானதாக அமைந்தது. உண்மையான உரிமையாளருக்கும், வன்முறையின் மூலம் நிலத்தை அபகரித்தவனுக்கும், பார்வையாளனாக நின்றவனுக்கும் நிலத்தை சம அளவில் பகிர்ந்து அளித்தது தீர்ப்பு கூறியது நீதி மன்றங்கள் காவிமயமாகி போனதை தெள்ள தெளிவாக பறைசாற்றுகிறது.

மசூதி இடிப்பு என்பது ஏதோ ஒரு உரையைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்ட ஒரு மக்கள் கூட்டம் எதேச்சையாக இடித்து தள்ளியதல்ல. அச்சுறுத்தி கீழ்படியவைத்து அடிமைகளாக மாற்றும் பிராமண ஆதிக்க சங்க்பரிவார செயல்திட்டத்தின் நீணடகால திட்டங்களின்  ஒரு அத்தியாயம் மட்டுமே பாபரி மஸ்ஜித் இடிப்பு. அந்த பட்டியலின் தொடர்ச்சியே  குஜராத் இனப்படுகொலையும் இந்துத்துவ மயமாக்கலும், காவிமயமாக்கலும் ஆகும்.
ஒரு ஜனநாயகதேசத்தில் வாழும் குடிமக்களுக்கு தங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற உணர்வு, நாட்டின் இருப்போடு தொடர்புடையது.’நாங்கள் பாதுகாப்பாக இல்லை.தற்போதைய கட்டமைப்புகளில் தங்களுக்கு நீதி கிடைக்காது போன்ற சிந்தனைகள் அங்கு வாழும் ஒருபகுதி மக்களுக்கு ஏற்படுவது நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தானது. இந்த பாதுகாப்பற்ற சூழல் நாட்டை பலகீனப்படுத்திவிடும். பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் நாட்டு நலனை முன் நிறுத்தி செயல்பட எந்த அரசால்தான் முடிந்துள்ளது? என்பது மீளாய்வுச் செய்யப்பட வேண்டிய விஷயம். இந்த நிலை தொடர்ந்தால் இந்தியா மீண்டும் ஒரு உடைவை நோக்கி பயணிக்கும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. 

No comments: