Sep 18, 2013

முடிந்தால் கைது செய்யுங்கள்! உ.பி .அரசுக்கு உமாபாரதி சவால்!

செப் 20/2013: உத்தரப் பிரதேசத்தின் முசாஃபர்நகர் மாவட்டத்தில் அண்மையில் நடந்த கலவரம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் உள்பட 16 பேரை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
முசாஃபர்நகர் மாவட்டத்திலும் அதன் அண்டை மாவட்டங்களிலும் ஏற்பட்ட வகுப்புக் கலவரத்தில் சிறுபான்மை மக்கள் 47 பேர் உயிரிழந்தனர். 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கலவரத்தின்போது முசாஃபர் நகர் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதற்காகவும், மாவட்டத்தில் நடந்த பல்வேறு கூட்டங்களில் (மகா பஞ்சாயத்து) வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதற்காகவும் இவர்கள் தேடப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர். எனினும் இதுவரை இவர்களில் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் இன்னும் 2 நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸார் கூறினர். மேற்கண்ட 16 பேரையும் கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு:
உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், மாநில சட்டப்பேரவையில் பேசுகையில், ""இந்தக் கலவரமானது, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்றாகும்.நிலைமையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி பாரதிய ஜனதா கட்சி அரசியல் ஆதாயம் பெறுவதற்காக இக்கலவரம் நிகழ்த்தப்பட்டது'' என்று குற்றம்சாட்டினார். எதிர்வரும் மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு, மாநிலத்தின் சூழலைக் கெடுக்க பாஜக முயற்சிப்பதாகவும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
உமாபாரதி சவால்:
சட்டப்பேரவை வளாகத்தில் பாஜக மூத்த தலைவர் உமாபாரதி தலைமையில் அக்கட்சி எம்.எல்.ஏ.க்களும் தொண்டர்களும் பெருமளவில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட பாஜக எம்.எல்.ஏ.க்களை முடிந்தால் கைது செய்யுமாறு உபி அரசுக்கு உமாபாரதி சவால் விட்டார். ""இந்த விஷயத்தில் கைது நடவடிக்கையை காவல்துறை முன்னெடுத்தால் கடும் விளைவுகள் ஏற்படும். உரிய புலன்விசாரணை நடத்தப்படாமல் யாரும் கைது செய்யப்படக் கூடாது. வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய குற்றச்சாட்டின் கீழ் கைது நடவடிக்கை எடுப்பதானால், உத்தரப் பிரதேச அமைச்சர் ஆஸம் கானையும் கைது செய்ய வேண்டும்'' என்று உமாபாரதி ஆவேசத்துடன் கூறினார்.
                                                  *மலர் விழி*

No comments: