ஈழத்தமிழர் படுகொலைக்குக் காரணமான காங்கிரஸ் கட்சியையும், துணை நின்று துரோகம் புரிந்த திமுகவினரையும் தண்டியுங்கள். குடும்ப அரசியல் ஆதிக்கத்துக்கு முடிவுகட்ட கிடைத்திருக்கிற பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்துங்கள் என்று தமிழக வாக்காளர்களுக்கு தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழர் தேசிய இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடை மீதான வழக்கு இன்னும் முடிவடையாத சூழலில் எங்களின் கரங்கள் கட்டுண்டு கிடக்கின்றன.
எனவே, நேரடியாகத் தேர்தல் களத்தில் போட்டியிட முடியாத நிலையில் வாக்காளர்களுக்கு இந்த வேண்டுகோள் விடுக்கிறேன். தமிழக சட்டமன்றத் தேர்தல் யாரிடம் ஆட்சி என்பதை மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலத்தையும், ஜனநாயகத்தின் எதிர்காலத்தையும் முடிவு கட்டக் கூடிய தேர்தலாகும்.
ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டு அறிவிக்கப்படாத அவசர கால நிலைமை நிலவுகிறது. நிர்வாகச் சீர்கேடும், லஞ்ச ஊழலும் தலைவிரித்தாடுகின்றன. மதுவின் மயக்கத்தில் மக்களை ஆழ்த்தியும் இலவசங்கள் மூலம் மக்களை ஏமாற்றவும் முயற்சி நடைபெறுகிறது.
பணத்தை வைத்துப் பதவி, பதவியை வைத்துப் பணம் என்ற நச்சுச் சுழற்சியில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தை விடுவிக்க வேண்டிய பொறுப்பு வாக்காளர்களுக்கு உண்டு. சந்தர்ப்பவாத அரசியல் பலிபீடத்தில் கிடத்தப்பட்டுக் கிடக்கும் ஜனநாயகத்தை மீட்காவிட்டால் ஜனநாயகம் சாகடிக்கப்பட்டு பணநாயகம் அரியணை ஏறிவிடும்.
இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த மிகப் பெரிய இனப்படுகொலையான ஈழத்தமிழர் படுகொலைக்குக் காரணமான காங்கிரஸ் கட்சியையும், துணை நின்று துரோகம் புரிந்த திமுகவினரையும் தண்டியுங்கள். குடும்ப அரசியல் ஆதிக்கத்துக்கு முடிவுகட்ட கிடைத்திருக்கிற பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்துங்கள்.
ஈழத் தமிழர்களுக்காகவும், தமிழக மீனவர்களுக்காகவும், காவிரி, முல்லைப் பெரியாறு, சேதுக் கால்வாய் போன்ற தமிழகத்தின் தலையாய பிரச்னைகளுக்காகவும், தமிழக இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்கு எதிராகவும் குரல் கொடுக்கும் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களையும் தமிழ்த் தேசிய உணர்வுள்ள வேட்பாளர்களையும் ஆதரித்து வெற்றி பெறவைக்க வேண்டுகிறேன்.
ஊழலற்ற, நேர்மையான, நீதியான ஆட்சியைத் தரவல்லர்கள் யார் என்பதைத் தேர்ந்து தெளிந்து வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு வாக்காளப் பெருமக்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்," என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

1 comment:
கண்டிப்பாக பாடம் கற்று கொடுக்கப்படும்
http://usetamil.forumotion.com
Post a Comment