ஜப்பானில் ஒரு மன்னர் இருக்கிறார் என்பது அநேகருக்கு தெரியாது. பூகம்பமும் சுனாமியும் சின்னாபின்னமாக்கியது போதாதென்று அணுக்கதிர் வீச்சும் மக்களை வறுத்துக் கொண்டிருக்கும் வேளையில் உலகின் பார்வை ஜப்பான் பக்கம் நிலைகுத்தி நிற்கிறது. நம்மை போன்ற நாடாளுமன்ற ஜனநாயகம்தான் அங்கும்.
இங்கிலாந்தில் உள்ளதை போல் ஒரு மன்னர் குடும்பமும் இருக்கிறது. எம்பரர் என்கிறார்கள். பேரரசர். 77 வயது அகிஹிட்டோ அந்த பொறுப்பில் இருக்கிறார். நேற்று டெலிவிஷனில் தோன்றி மக்களுக்கு உரை நிகழ்த்தியிருக்கிறார். அதிசயமாக சொல்கிறார்கள். பேரரசர் மக்களோடு பேசுவதே கிடையாதாம்.
இவருடைய அப்பா ஹிரோஹிட்டோ 1945 ஆகஸ்ட் 15ல் ரேடியோ மூலம் பேசினார். நாகசாக்கி, ஹிரோஷிமா நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டுகளை வீசி அழித்து இரண்டாம் உலக யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததை தொடர்ந்து, ஜப்பானிய ராணுவம் சரண் அடைய ஒப்புக்கொண்ட தருணம் அது. ஒருநாள் தாமதித்திருந்தால் சோவியத் யூனியன் தாக்குதல் தொடங்கியிருக்கும் என்ற நிலை அப்போது அவர் பேசினார்.
இன்று மகன் அகிஹிட்டோ உரை உருக்கத்தின் உச்சம். ‘இது நமக்கு நேர்ந்துள்ள பெரும் சோதனை. எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருந்தாலும், எத்தனை பேர் இந்த பேரழிவில் பலியானார்கள் என்பதைக்கூட கணக்கிட முடியாத நிலையில் இருக்கிறோம். வசதியாக வாழ்ந்த என் குடிமக்கள் உணவு, தண்ணீர், வீடு, மின்சாரம், போக்குவரத்து எதுவும் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை பார்க்க கஷ்டமாக இருக்கிறது. இதைவிட நிலைமை மோசமாக முடியாது என்பதுதான் ஒரே ஆறுதல். நாளைய பொழுது விடியும் என்ற நம்பிக்கையுடன் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருப்போம். நம்பிக்கையை விட்டு விடாதீர்கள்’ என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் பேரரசர்.
மக்கள் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்கள். தாங்கள் படும் மரண அவஸ்தையை காட்டிலும், மன்னர் கண் கலங்குவதை தாங்க முடியவில்லை. பூகம்பம், வெள்ளம் போன்ற நிகழ்வுகளின்போது அராஜகம் அரங்கேறுவது வழக்கம். அமெரிக்காவிலும் பார்த்தோம். ஆனால் ஜப்பானியர்கள் எந்த ஒழுங்கையும் மீறாமல், கூச்சல் குழப்பம் எதுவுமின்றி குடிதண்ணீர் வாங்குவதற்குக்கூட அமைதியாக வரிசையில் காத்திருக்கிறார்கள். இவ்வளவு நல்ல மனிதர்களுக்கு அடுத்தடுத்து ஏனிந்த சோதனை.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
இவ்வளவு நல்ல மனிதர்களுக்கு அடுத்தடுத்து ஏனிந்த சோதனை. //
ஒரு படிப்பினை அனைவருக்குமே..
பிராத்திப்போம் அம்மக்களுக்காக
Post a Comment