கோத்ராவில் நிகழ்ந்த அந்த கோர சம்பவம் இந்த நூற்றாண்டின் மாபெரும் இனப்படு கொலைக்கு காரணமாக அமைந்தது. கோத்ராவில் நிகழ்ந்தது விபத்தே தவிர சதி செயல் அல்ல என நீதிபதி பானர்ஜி கமிஷன் தனது தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டது. ஆனால் முஸ்லிம்கள் என்றால் மட்டும் நீதியினை மறுக்கும் தங்கள் நீதி பரிபாலனத்தை தவறாமல் செய்தன. கோத்ரா ரயில் வழக்கில், 31 பேர் குற்றவாளிகள் எனவும், 61 பேர் விடுவிக்கப்படுவதாகவும் அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது நீதி பரிபாலனத்தில் கேலி செய்யும் தீர்ப்பு என சமூகநல ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்திய தண்டனைச் சட்டம் 302-ன் கீழ் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 31 பேருக்கான தண்டனை குறித்த அறிவிப்பு நீங்கள் இந்த இதழை பார்க்கும்போது வெளி வந்திருக்கக்கூடும்.
சபர்மதி சம்பவத்தின் பின்னணியில் சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக குஜராத் அரசு கூறியதை அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்டவர்களில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முதன்மையானவர்களில் ஒருவர் என்று கருதப்பட்ட மவுல்வி உமர்ஜியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற முக்கியக் குற்றவாளிகளான ஹாஜி பில்லா, ரஜாக் குர்குர் ஆகியோரை குற்ற வாளிகளாக நீதிபதி அறிவித்திருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை 2009ம் ஆண்டு ஜூன் மாதம் சபர்மதி ஜெயிலில் தொடங்கியது. இந்த வழக்கில் 94 பேர் மீது குற்றம்சாட்டப் பட்டிருந்தது. ரயில் வலுக்கட்டாயமாக நிறுத்தப் பட்டுள்ளது. மிக அதிக அளவிலான பெட்ரோல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ரயிலின் எஸ்-6 பெட்டி மீது மிக அதிக அளவில் பெட்ரோல் ஊற்றப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளதாக குஜராத் அரசு வழக்கறிஞர் ஜே.எம். பன்சால் குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று கோரினீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இப்போதைய சூழலில் இது குறித்து கருத்து தெரிவிக்கக் கூடாது. இருப்பினும் இந்த வழக்கில் வாதிட வேண்டிய அனைத்து அம்சங்களை நீதிமன்றத்துக்கு சுட்டிக்காட்டி, தீர்ப்பு அளிக்குமாறு குறிப்பிட்டதாக அவர் கூறினார். இந்த வழக்கில் மவ்லவி உமர்ஜி குற்றமற்றவர் என நீதிமன்றம் கருதியது. அதனால் அவர் விடுதலை செய்யப்பட்டார். அவர் எந்தக் காரணத்தால் விடுவிக்கப்பட்டார் என்பது தீர்ப்பின் முழு விவரம் வெளியாகும் போதுதான் தெரியவரும் என்றும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
விசாரணையின்போது மொத்தம் 253 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. மொத்தம் 1,500 ஆவணங்கள் சாட்சிகளாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. ஒட்டுமொத்தமாக இந்த வழக்கில் 134 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் 14 பேர் மீதான குற்றத்தை நிரூபிக்க ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர். ஐந்து பேர் மைனர்கள் என்பதால் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர். விசாரணை நடக்கும்போதே 5 பேர் உயிரிழந்துவிட்டனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய 16 பேர் தலைமறைவாக உள்ளதாக குஜராத் அரசு குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து 94 பேர் மீது வழக்கு விசாரணை நடைபெற்றது. இவர்களில் 80 பேர் சிறையில் உள்ளனர். 14 பேர் பிணையில் உள்ளனர். 2 தனித்தனி குழுக்கள் இந்த ரயில் எரிப்பு சம்பவம் குறித்து விசாரித்தது. குஜராத் மோடி அரசு நானாவதி குழுவை நியமித்தது. இந்தக் குழுவின் அறிக்கையில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்-6 ரயில் பெட்டி எரிந்தது விபத்தல்ல என்றும், அது முன்கூட்டியே திட்டமிட்ட சதி வேலை என்றும் குறிப்பிட்டிருந்தது. அந்த பெட்டியில் பயணம் செய்யும் கரசேவகர்களைத் தாக்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் நானாவதி குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கை 2008-ம் ஆண்டு நவம்பரில் தாக்கல் செய்யப்பட்டது.
கோத்ரா சம்பவம் நிகழ்ந்தபோது ரயில்வே துறை சார்பாக எத்தகைய விசாரணை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வில்லை. எனவே பின்னர் ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், நீதியரசர் யு.சி. பானர்ஜி தலைமையில் ஒரு குழுவை நியமித்திருந்தார். இக்குழு ரயில் பெட்டி எரிந்ததற்கு விபத்தே காரணம் என குறிப்பிட்டிருந்தது.
ஆனால் மோடியால் நியமிக்கப்பட்ட நானாவதிஷா கமிட்டி அறிக்கையின் அம்சங்களின் அடிப்படியில் மட்டுமே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பானர்ஜி ஆணையத்தின் அறிக்கையை சம்பிரதாயத்திற்கு கூட நீதிமன்றம் பரிசீலிக்க வில்லை. மோடி அமைத்த கமிஷன் ஹிந்துத்துவா சக்திகளுக்கு ஆதரவாக நடந்த குஜராத் கலவரத்தை நியாப்படுத்த அமைக்கப்பட்டதாகும். மோடியின் ஆட்சியின் கீழ் உள்ள முழுவதிலும் ஹிந்துத்துவா சிந்தனை படைத்த நீதிபதிகளே நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது. தீர்ப்பை பாஜக வரவேற்றுள்ளது. இதிலிருந்தே எந்த அளவுக்கு ஒரு சார்பாக இந்த தீர்ப்பு உண்மைகளை மூடி மறைக்கப் பார்த்துள்ளது என்பது தெளிவாகியுள்ளது.
நன்றி: தமிழ் மாறன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment