Mar 2, 2011

வெடித்து சிதறிய விமானங்களின் மதிப்பு 15 மில்லியன்!!

மார்ச்,3: சில தினங்களுக்கு முன் வானத்தில் ஒன்றுடன் ஒன்று மோதி அழிவை சந்தித்த சிறீலங்கா வான்படையின் இரு கிபீர் விமானங்களின் பெறுமதி 15 மில்லியன் டொலர்கள் என கணிப்பிடப்பட்டுள்ளது. நேற்று அழிவை சந்தித்த இரு விமானங்களும், வன்னியில் நடைபெற்ற பேரில் விடுதலைப்புலிகளின் பதுங்கு குழிகளை அழிப்பதற்கு அதிகம் பயன்படுத்தப்பட்டதாக சிறீலங்கா வன்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் தயாரிப்பான கிபீர் விமானங்கள் சாம்-7, சாம்-14 வகையான இலகுவாக தோளில் சுமந்து செல்லப்படும் சிறிய ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகளின் தாக்குதல்களில் இருந்து தப்பக்கூடியவை.

வன்னியில் நடைபெற்ற போர்களில் மூன்றாவது மற்றும் நான்காவது ஈழப்போர்களில் விடுதலைப்புலிகளின் ராதா வான்காப்பு படையணி மேற்கொண்ட சாம்-14 ஏவுகணைத் தாக்குதல்களில் இருந்து இரு தடவைகள் கிபீர் ரக விமானங்கள் தப்பியுள்ளன. எனினும் தாழ்வாக பறந்த கிபீர் விமானம் ஒன்று நான்காவது ஈழப்போரில் வான்காப்பு படையினரின் விமான எதிர்ப்பு பீரங்கி தாக்குதலில் சிக்கி கடுமையாக சேதமடைந்திருந்தது. அதில் இருந்து வீழந்த பாகங்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வீழ்ந்திருந்தன.
மேலும் கட்டுநாயக்கா வான்படை தளம் மீதான தாக்குதலின் போது கிபீர் விமானங்கள் சேதமாக்கப்பட்டதுடன், இதற்கு முன்னரும் இரு கிபீர் விமானங்கள் விடுதலை புலிகளால் சுட்டு வீழ்த்தபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: