Feb 11, 2011

சென்னையில், நாளை பயிற்சி ஆட்டம்; தென்ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே!!

சென்னை, பிப். 11-உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 2-ந்தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது. இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 நாடுகளில் இந்தப் போட்டி நடக்கிறது. உலக கோப்பை போட்டியில் 4 ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. நியூசிலாந்து - கென்யா (பிப்.20), தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து (மார்ச் 6), இங்கிலாந்து - வெஸ்ட்இண்டீஸ் (மார்ச் 17), இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் (மார்ச் 20) ஆகிய போட்டிகள் சேப்பாக்கத்தில் நடக்கிறது. உலக கோப்பை போட்டிக்கு முன்பு இதில் பங்கேற்கும் 14 அணிகளும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இதில் 2 பயிற்சி ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

நாளை (12-ந்தேதி) நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இதற்காக இரு அணி வீரர்களும் ஏற்கனவே சென்னை வந்து விட்டனர். தென்ஆப்பிரிக்க வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர். ஜிம்பாப்வே வீரர்கள் இன்று காலை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி பெற்றனர். பிற்பகலில் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் பயிற்சி பெறுவார்கள். இந்த பயிற்சி ஆட்டம் பகல் - இரவாக நடக்கிறது. பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

மற்ற நகரங்களில் நாளை நடைபெறும் பயிற்சி ஆட்டங்களில் நியூசிலாந்து - அயர்லாந்து (நாக்பூர்), கென்யா - வெஸ்ட்இண்டீஸ் (கொழும்பு), இலங்கை - நெதர்லாந்து (கொழும்பு), வங்காளதேசம் - கனடா (சிட்டாகாங்) மோதுகின்றன. சென்னையில் 2-வது பயிற்சி ஆட்டம் 16-ந்தேதி நடக்கிறது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் 13-ந்தேதி மோதுகிறது. இந்த ஆட்டம் பெங்களூரில் நடக்கிறது.

No comments: