கெய்ரோ,பிப்.10:சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கின் முப்பது ஆண்டுகால அடக்குமுறை ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தே தீருவோம் என்ற உறுதியுடன் களமிறங்கியுள்ள எகிப்து நாட்டு மக்களின் எழுச்சிப் போராட்டம் 17-வது நாளை எட்டிய நிலையில் கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கம்(சுதந்திர சதுக்கம்) அரபுலக புரட்சியின் அடையாளமாகவும், இதயத் துடிப்பாகவும் மாறிவிட்டது. எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவின் பொது இடமான தஹ்ரீர் சதுக்கத்தில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தை சர்வதேச ஊடகங்களோ, நாடுகளோ புறக்கணிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
சமூகத்தின் பங்கேற்கும் இந்த மக்கள் எழுச்சியில் முன்னிலைப்படுத்த எந்த தலைவரும் இல்லையென்றாலும் எல்லா காரியங்களும் முறையாக நடந்துவருகிறது. புதிய தலைவர்கள் உருவாகி வருகின்றார்கள். கமிட்டிகள் உருவாகின்றன. சுயமாக தலைமைப் பதவியை ஏற்றுக்கொள்கின்றார்கள். 55 ஆயிரம் சதுர அடி பரப்பளவைக் கொண்ட தஹ்ரீர் சதுக்கத்தில் பொருளாதார-பாதுகாப்பு ஏற்பாடுகளில் முற்றிலும் ஒழுங்குமுறை இல்லை. தஹ்ரீர் சதுக்கத்தைச் சுற்றிலும் கற்கள்,மணல், கட்டிட சிதிலங்கள் ஆகியவற்றால் தடுப்புகளை ஏற்படுத்தி 26 லிருந்து 40 வயது வரையிலான எகிப்திய இளைஞர்கள் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
அடையாள அட்டையும், பரிசோதனையும் இல்லாமல் எவருக்கும் அனுமதியில்லை. உடல் பரிசோதனை நடத்தி ஆயுதங்கள் எதுவுமில்லை என்பதை உறுதிச்செய்த பிறகே உள்ளேச் செல்லமுடியும். பாதுகாப்பு பொறுப்பை மேற்கொள்ளும் நபர்களை அடையாளங்காண தனியாக பாட்ஜ் வழங்கப்பட்டுள்ளது. ராணுவம் இளைஞர்களுடன் ஒத்துழைக்கின்றார்கள். பெரும்பாலும் ராணுவம் பார்வையாளர்களாகவே உள்ளனர். பத்திரிகையாளர்களுக்கு மீடியா கோ-ஆர்டினேட்டருடன் தொடர்புக் கொள்ளவும், போலீசார் மற்றும் அரசுக்கு ஆதரவான பல்தாகியா(குண்டர்கள்)க்களின் தொந்தரவுகளைக் குறித்து சர்வதேச அமைப்புகளிடம் புகார் அளிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
தேநீர், எகிப்திய பலகாரங்கள் விற்கும் சாலையோர கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பணமிருந்தால் வாங்கி சாப்பிடலாம். பணமில்லாதவர்களுக்கு உணவு வழங்க இளைஞர்கள் நிதியை திரட்டி அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்கின்றனர். மருந்துகள் மற்றும் துணிகள் ஆகியன இவர்கள் வழங்கி வருகின்றார்கள். மக்கள் எழுச்சியின் கொந்தளிப்பின் வேளையில் அதிகாரிகளின் துப்பாக்கிச்சூட்டில் இறந்துபோன உயிர்தியாகிகளின் படங்களுடனான பெரிய பேனர்களை தஹ்ரீர் சதுக்கத்தின் சுற்றிலும் காண முடிகிறது.
அடிக்கடி உத்வேக மூட்டும் வகையில் புரட்சி கீதங்கள் பாடப்படுகின்றன. கோஷங்கள் முழங்கப்படுகின்றன. அத்தியாவசியப் பொருட்களை எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு கொண்டு செல்வதை முபாரக்கின் ஆதரவாளர்கள் தடுத்தபோதிலும் அவற்றையெல்லாம் எதிர்கொள்வதற்கான யுக்திகளையும் எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் வரையறுத்துள்ளார்கள்.
சதுக்கத்தின் மத்தியில் அமைந்திருக்கும் மேடையில் சிறந்த ஒலிபெருக்கி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கலைஞர்கள் மக்கள் எழுச்சிக்கு உத்வேகமூட்டும் வகையில் பல நிகழ்ச்சிகளை மேடையில் நடத்துகின்றனர். மொபைல், லேப்டாப் ஆகியவற்றை ரீசார்ஜ் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
முபாரக் என்ற சர்வாதிகாரியிடமிருந்து எகிப்தை காப்பாற்றுவதற்காக அந்நாட்டு மக்கள் சுயமாக தலைவர்களாகவும், தொண்டர்களாகவும் மாறிவிட்டனர். இருப்பதை பகிர்ந்து கொண்டு தங்களின் கண்ணியத்தையும், உரிமைகளையும் மீட்டெடுப்பதற்கான முயற்சியில் எகிப்திய மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment