தினந்தோறும் தண்ணீரில் மிதந்து தங்களின் வாழ்வை நிலைநிறுத்திக் கொள்ளும் மீனவர்களுக்கு இடியாய் இறங்கியது அந்த அறிவிப்பு. கடந்த 11.7.01 அன்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் 53 வகையான கடல் பொருட்களைப் பிடிப்பதற்கு தடை விதித்தது மத்திய அரசு. பின்னர் 5.12.01 அன்று 53 வகையிலிருந்து 23 கடல் பொருட்களுக்கான தடையை நீக்கி விதிவிலக்கும், அனுமதியும் வழங்கியது மத்திய அரசு.
ஆனால் தடை செய்யப்பட்ட பொருட்களில் மூன்று வகையான கடல் அட்டை மீன்களின் மீதான தடையை மட்டும் நீக்கவேண்டும் என்று கடந்த பத்தாண்டு காலமாக உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் எனப் போராடி வரும் மீனவர்களின் கோரிக்கையை யாரும் எந்த அரசாங்கமும் கண்டுகொள்ளவில்லை. மீனவர்களின் துன்பங்களை அறிய இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் சென்றோம். நம்மை சந்தித்த விசைப்படகு உரிமையாளர் பூபதி கூறுகையில், வேளாண் விஞ்ஞானி என்று தன்னை சொல்லைக்கூடிய எம்.எஸ்.சுவாமிநாதன், கடல் அட்டை அழியக்கூடியது என்ற அளித்த தகவலையடுத்து மத்திய அரசு கடல் அட்டை பொருட்களுக்கு தடை விதித்தது. ஆனால் இது முற்றிலும் தவறான தகவலாகும். ஏனெனில் இந்த அட்டைகள் ஆறு மாதத்திற்கு ஒருமுறை சுமார் 10 லட்சம் குஞ்சுகளைப் பொறிக்கும் தன்மை கொண்டது. எனவே இதைத் தடை செய்திருப்பது முற்றிலும் தவறானது. உடனடியாக இந்தத் தடையை நீக்கவேண்டும்’’ என்கிறார்.
இறால் வியாபாரி காதர் முகைதீன் பேசும் போது, ‘‘இந்த அட்டைகளைப் பிடிப்பதற் கென்று தனியாக எந்த வலையும் கிடையாது. இறால் வலையில் தானாகவே மாட்டிவிடும். இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவெனில், வலையில் ஏறிய மறுகணமே இந்த அட்டைகள் இறந்துவிடும். இந்த அட்டைகளைக் குறிவைத்துப் பிடித்தார்கள் என்று இதுவரை 125 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களைப் பிடிப்பதற்கென்றே கஸ்டம்ஸ், நேவல், கோஸ்ட் கார்டு, பாரஸ்ட், க்யூ பிராச், தமிழக காவல்துறை என அனைத்து தரப்பினரும் செயல்படுகின்றனர்’’ என்றார்.
கூலித்தொழிலாளி நாகன் கூறுகையில், ‘‘நான் 25 வருஷத்துக்கு மேலாக மண்டபத்தில் வசிக்கிறேன். படகு கரைக்கு வரும்போது அப்படகை சுத்தம் செய்கிற பணியை நான் செய்து வருகிறேன். அப்படி கடந்த ஆண்டு படகை சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது படகின் உள்ளே இரண்டு அட்டைகள் கிடந்ததாகக் கூறி என்னைக் கைது செய்தனர். இதுவரைக்கும் 78 முறைக்கும் மேல் நிபந்தனை ஜாமீனில் வெளி வந்துள்ளேன்’’ என்கிறார்.
மீனவர்களுக்கு உணவு சமைத்து தரும் வசந்தா, ‘‘மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் நாங்க எங்க பொழைப்ப நடத்துறோம். கடல் அட்டையைப் பிடிக்கிறாங்கனு மீன் பிடிக்கிற எல்லோரையும் தேச குற்றவாளியாகக் கருதி கைது செய்வதால் பெரும்பாலானவர்கள் மீன்பிடிக்க வருவதில்லை. இதனால் எங்க பொழப்புலயும் மண் விழுந்திருச்சு. எங்க பொழப்புல மண் அள்ளி போட்ட பாவிகளை அந்த தெய்வம் சும்மாவிடாது’’’ என்று சாபமிடுகிறார்.
மீன்பிடி தொழிலாளி ரஹ்மத்துல்லாஹ், ‘‘பத்துக்கும் மேற்பட்ட கடல் அட்டைகள் உள்ளன. ஆனால் நாங்கள் கருப்பு அட்டை, வெள்ளை அட்டை, சிவப்பு அட்டை என மூன்று வகையான அட்டைகளைப் பிடிப்பதற்குத்தான் அனுமதி கேட்கிறோம். ஆனால் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி மையம் (Central Marine Fisher Research Institute-CMFRI) அனுமதி தர மறுக்கிறது. எனவே உடனடியாக இத்தடை நீக்கப்பட வேண்டும்’’ என்றார்.
தமுமுக மாவட்ட துணைச் செயலாளரும் மீன்பிடி தொழிலாளியுமான மண்டபம் அஜ்மல், ‘‘கடந்த சட்டமன்றத் தேர்தலில் கடல் அட்டை மீதான தடையை கண்டிப்பாக நீக்குவோம் என்று கூறித்தான் காங்கிரஸ்& திமுக கூட்டணி, மீனவர்களின் வாக்குகளைப் பெற்றது. ஆனால் இன்றுவரை தடையை நீக்குவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கடலில் மீன்பிடி தொழில் செய்யும் போது வலைகளில் தானாக வந்துவிடும் அட்டை மீன்களை கரைக்கு கொண்டு வந்தால் கூட மீனவர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பதும், ஏழு வருட சிறைத் தண்டனையும், 25000 ரூபாய் அபராதமும் விதிக்கும் நடைமுறை உள்ளது. இதனால் மீனவர்கள் கடும் துயரத்திற்கு ஆளாகி வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம்.
போராட்டம், ஆர்ப்பாட்டம் என அனைத்து விதமான போராட்டங்களையும் நடத்திவிட்டோம். கடந்த 25.01.2011 அன்று மண்டபத்தில் அனைத்து மீனவர்களும் ஒன்று திரண்டு உண்ணாவிரதத்தை மேற்கொண்டோம். ஆனால் பாராளுமன்ற உறுப்பினரோ, சட்டமன்ற உறுப்பினரோ யாரும் எங்களைக் கண்டு கொள்ளவில்லை என்று கூறியவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் இதற்கான பதிலடியை கண்டிப்பாக கொடுப்போம்’’ என்றார்.
மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கடல் அட்டைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி தமுமுக மாநில பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி :புதுமடம் அனீஸ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment