Jan 25, 2011

உளவு போர் விமான தொழில்நுட்பத்தை சீனாவுக்கு விற்ற இந்தியருக்கு சிறை.

பீஜிங்:உளவு போர் விமான தொழில்நுட்பத்தை சீனாவுக்கு விற்றதாக, அமெரிக்க இந்தியர் ஒருவருக்கு, அந்நாட்டு கோர்ட் 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இதையடுத்து, தனது உளவு போர் விமான தொழில்நுட்பம் அமெரிக்காவில் இருந்து திருடப்பட்டதல்ல என்று, சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்தவரும், அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையில் வடிவமைப்புப் பொறியாளராக பணியாற்றி வந்தவருமான நாஷி கொவாடியா(66) என்பவர், அமெரிக்காவின் பி-2 உளவு போர் விமான தொழில்நுட்பத்தை சீனாவுக்கு விற்றதாகவும், ஜெர்மனி, இஸ்ரேல் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள தனி நபர்கள் சிலருக்கு அமெரிக்க ராணுவ ரகசியங்களை விற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டு, 2005ல் கைது செய்யப்பட்டார்.அவர் மீது சாட்டப்பட்ட 17 குற்றங்களில் 14 உறுதிப்படுத்தப்பட்டு, நேற்று அவருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், சமீபத்தில் சீனா நவீன உயர் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட ஜே-20 ரக உளவு விமானம் ஒன்றை வெற்றிகரமாகப் பரிசோதித்து பார்த்தது. இந்நிலையில், கொசாவோ போரில் பங்கேற்ற க்ரோவோஷியா நாட்டின் முன்னாள் தளபதி ஒருவர், 1999ல் நடந்த செர்பியத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட அமெரிக்க தயாரிப்பான "எப்-117 நைட்வாக்' என்ற உளவு போர் விமானத்தின் தொழில்நுட்பத்தைத் திருடித் தான் சீனா ஜே-20 ரக உளவு போர் விமானத்தை தயாரித்திருப்பதாகக் குற்றம் சாட்டினார். இந்த இரண்டு சம்பவங்களை அடுத்து, இதுகுறித்து விளக்கமும் மறுப்பும் தெரிவித்துள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான "க்ளோபல் டைம்ஸ்',"ஜே-20 உளவு போர் விமானம் முழுவதும் உள்நாட்டுத் தயாரிப்பு' என்று தெரிவித்துள்ளது.

No comments: