எகிப்திலே தொடர்ந்து நான்காவது நாளாக நடந்த ஆர்ப்பாட்டங்களில் குறைந்தது எட்டு பேர் கொல்லப் பட்டுள்ளனர். வெள்ளிகிழமை ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் வெள்ளமெனத் திரள ஆரம்பித்திருந்தனர். அவர்களுக்கும் கலகக் கட்டுப்பாட்டுப் பொலிசாருக்கும் இடையே மோதல்கள் எழுந்துள்ளன. கெய்ரோவிற்கு சற்று வெளியே அமைந்துள்ள கீஸா பகுதியில் கலகக் கட்டுப்பாட்டுப் பொலிசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் வீசியும் தண்ணீர்ப் பாய்ச்சி அடித்தும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைத்துள்ளனர்.
நாட்டின் கிழக்குப் பகுதி நகரமான சூயெஸ்ஸிலும் கலவரங்கள் நடந்துள்ளதாகத் தெரிகிறது. அங்கே வியாழக்கிழமை நடந்த கலவரங்களின்போது மூன்று பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
தவிர கெய்ரோவின் மத்திய பகுதியில் தொடர்ந்து நான்காவது நாளாக ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே மோதல் மூண்டது. துறைமுக நகரமான அலெக்ஸாந்திரியாவிலும், இஸ்மாயிலியா, சினாய் போன்ற இடங்களிலும் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டங்கள் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருப்பவர்களில் பெரும்பான்மையானோர் இளைஞர் குழுக்கள் என்று தெரிகிறது. நாட்டில் வேகமாகப் பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டம், ஊழல், அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சி ஆகியவற்றால் விரக்தி அடைந்திருப்பதாக இவர்கள் கூறுகின்றனர். இதுவரை நடந்த ஆர்ப்பாட்டங்களில் எகிப்தின் மிகப்பெரிய எதிர்க்கட்சி இஸ்லாமிய சகோதரத்துவம் என்ற அமைப்பு கலந்துகொள்ளவில்லை. ஆனால் இனி தாங்களும் ஆர்ப்பாட்டங்களில் இறங்க எண்ணங்கொண்டுள்ளதாக இவர்களும் அறிவித்துள்ளனர். டுனீஷியாவில் மக்கள் கொந்தளிப்பை அடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் கண்டதால் எகிப்திலும் மக்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் இறங்கியுள்ளனர் எனச் சொல்லலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment