
நியூயார்க்: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரம் அல்லாத உறுப்பினராக, 19 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா மீண்டும் இடம் பெற்றது. இந்தாண்டின் ஆகஸ்ட் மற்றும் அடுத்தாண்டின் நவம்பர் மாதங்களில் பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா தலைமை பொறுப்பேற்கும். ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலில், 19 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா நேற்று அதிகாரப்பூர்வமாக நிரந்தரம் அல்லாத உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டது. இரண்டாண்டு காலம் (2011-2012) இந்தப் பொறுப்பில் நீடிக்கும். இந்தியாவுடன், ஜெர்மனி, தென் ஆப்ரிக்கா, கொலம்பியா மற்றும் போர்ச்சுகல் நாடுகளும் பொறுப்பேற்றுக் கொள்கின்றன. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நாடு, பாதுகாப்பு கவுன்சிலில் தலைமை பொறுப்பேற்கும். அது, ஆங்கில எழுத்தின் அகர வரிசைப்படி அமையும். அதன்படி, இந்தாண்டு ஆகஸ்ட் மற்றும் அடுத்தாண்டு நவம்பர் ஆகிய இரு மாதங்களில் இந்தியா தலைமை பொறுப்பேற்கும்.
நேற்று பொறுப்பேற்றது உட்பட, நிரந்தரம் அல்லாத உறுப்பினர் பதவிக்கு இந்தியா இதுவரை ஏழு முறை பொறுப்பேற்றுள்ளது. பயங்கரவாதச் செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகள், ஐ.நா., அமைதிப் படை விவகாரம் மற்றும் மனித உரிமை செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு கவுன்சிலில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பயங்கரவாதம் உலகளாவிய நிலையில் வளர்ந்துள்ள இன்றைய காலகட்டத்தில், இந்தியாவுக்கு கிடைத்துள்ள இந்தப் பதவி, பயங்கரவாதத்திற்கு எதிரான அதன் நடவடிக்கைகளை உலகம் அறிந்து கொள்ள உதவிடும். இதுகுறித்து ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் ஹர்தீப் சிங் புரி கூறுகையில், "நமது முக்கிய இலக்கு பயங்கரவாத பிரச்னை தான். வரக் கூடிய மாதங்களில், கவுன்சிலோடு இணைந்து அதற்கான நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுக்கும்' என்றார்.
1 comment:
இது தற்காலிக் இடம் தானே ! நிரந்தர இடம் கிடைப்பது எப்போது. அதற்கான தகுதி நமக்கு வருவது எப்போது. ........................
Post a Comment