உலகம் முழுவதும் மதங்கள் இருக்கின்றன. கடவுள்கள் இருக்கின்றன. எல்லா வற்றிலும் மூட நம்பிக்கை களின் முடைநாற்றம் உண்டு, உண்டு, அய்யம் இல்லை.ஆனாலும், இந்து மதக்காரர்கள் கொட்டி வைத்துள்ள புளுகுகள், கட்டுக் கதைகளின் முன்னால் எல்லா மதங்களும் பிச்சை வாங்கவேண்டும்.
பக்தி என்று வந்து விட்டால், மாட்டுச் சாணியையும், மாட்டு மூத்திரத்தையும் கலந்து குடிக்க வைக்கலாம் (பஞ்சகவ்யம்: மாட்டு மூத்திரம், சாணி, பால், தயிர், வெண்ணெய்) அதுவும் தட்சணை பெற்றுக்கொண்டு குடிக்க வைக்கலாம் என்கிற அளவுக்கு இந்து மதக்காரனின் மூளையை ஆபாசமாக்கியதற்குப் பிறகு - முடக்கி விட்ட பிறகு எதைத்தான் எழுத மாட்டார்கள் - எந்த எல்லைக்குச் சென்றுதான் உளறமாட்டார்கள்?
21 ஆம் நூற்றாண்டின் முகப்பில் நவீன கருவிகளையெல்லாம் பயன்படுத்தி நடத்தப்படும் ஏடுகளும், இதழ்களும் வெட்கம் கெட்ட மூளிக்கு மானமாவது, அறிவாவது என்கிற தன்மையில் நடந்துகொள்கின்றனவே - இவைகளுக்கெல்லாம் உடலில் ஆடைகள் ஒரு கேடா என்று நாக்கைப் பிடுங்கக் கேட்கத் தோன்றுகிறது.நவராத்திரி என்று கூறி ஒன்பது நாள் மூடக் கூத்துப் பற்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டூகக் கதை! ஏழாம் நாள் நவராத்திரி பற்றி கதை என்னவாம்! பிருங்கி முனிவன் சிவ பக்தனாம், சிவனைத் தவிர யாரையும் கும்பிடமாட்டானாம்; இது பார்வதிக்குக் கோபமாம்!
ஒருமுறை சிவலோகத்துக்கே (முகவரி என்னவோ!) இந்த முனிவன் சென்றானாம். சிவனும், பார்வதியும் ஒரு சேர உட்கார்ந்துகொண்டு இருந்தார்களாம்! பார்வதியைக் கும்பிடக் கூடாது என்று அந்த முனிவன் வண்டு உருவம் எடுத்து சிவனைச் சுற்றிப் பறந்து வணங்கினானாம்.
உடனே சிவன் செய்த சித்து விளையாட்டு என்ன தெரியுமா? பார்வதியை இடுப்பின் இடதுபுறத்தில் தூக்கி வைத்து அர்த்த நாரீஸ்வரராக (ஆண்பாதி - பெண் பாதி) காட்சியளித்தானாம். வேறு வழியின்றி அந்த முனிவன் இருவரையும் வணங்கித் தொலைத்தானாம்.
எப்படி இருக்கிறது? கடவுள் ஒருவரே - உருவமற்றவன் என்று ஒரு பக்கத்தில் கூறிக்கொண்டு, இன்னொரு பக்கத்தில் இத்தனை உருவங்கள், சாதாரண மனிதர்களிடத்தில் உள்ள ஆசாபாசங்கள் கடவுளிடத்தில் என்றால், இது முட்டாள்தனம் மட்டுமல்ல - மிகவும் கீழிறக்கப் பண்பாடும் ஆகும். கடவுளிடத்திலும் தன் முனைப்பு - தன்னை வணங்கவேண்டும் என்று ஆணவம் - முனிவர் போன்ற பக்தி நிலையில் உள்ளவர்களிடத்திலே கூட விருப்பு - வெறுப்பு என்றால், இவற்றை நம்புவதால், வழிபடுவதால், நல்லறிவும், நற்பண்பும் கிட்டுமா என்பதை எண்ணிப் பார்ப்பார்களா?
நன்றி : “விடுதலை”.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment