வாஷிங்டன், ஆக.12: இந்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நம்பகத்தன்மை உடையது அல்ல என்று அமெரிக்க நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.அமெரிக்கப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், நிபுணர்கள் இந்த கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். பேராசிரியர் பென் அடிடா (ஹார்வர்ட் பல்கலைக்கழகம்), டாக்டர் ஜோஷ் பெனலோ (மைக்ரோசாஃப் ஆய்வுப்பிரிவு), பேராசிரியர் மேட் பிளேஸ் (பென்சில்வேனியா பல்கலைக்கழகம்), பில் செஸ்விக் (ஏடி அண்ட் டி ஷனான் லேப்ஸ்), பேராசிரியர் ரஸ்ஸல் ஏ. ஃபிங்க் (மேரிலேண்ட் பல்கலைக்கழகம்), பேராசிரியர் இயன் கோல்ட்பெர்க் (வாட்டர்லூ பல்கலைக்கழகம்), டாக்டர் ஜோசப் லோரன்சோ ஹால் (கலிபோர்னியா பல்கலைக்கழகம்), பெர்க்லி (பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்), ஹாரி ஹர்ஸ்டி (சிடிஓ, கிளியர் பேலட் குரூப்), நீல் மெக் பெர்னட் (தேர்தல் தணிக்கை) ஆகியோர் அடங்கிய குழு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை தயாரித்துள்ளது. இதுதொடர்பாக அவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு எழுதியுள்ள கடித விவரம்:
வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழு உறுப்பினர்களின் விவாதங்களைக் கேட்டறிந்த பிறகு இந்த முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம். அதன்படி இந்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பைத் தருவதில்லை. தேர்தல் முடிவுகளில் தெளிவான தகவலைத் தருவதில்லை, சரிபார்ப்பு வசதியில்லை போன்ற குறைகள் உள்ளன. இதனால் தேர்தல் முடிவுகளில் நம்பகத்தன்மை கிடைக்காது என்ற முடிவுக்கு வந்துள்ளோம். இந்த வகை இயந்திரங்களில் தில்லுமுல்லு சாத்தியம்.
வாஷிங்டனில் நடைபெற்ற தொழில்துறை மாநாட்டு விவாதத்தில் கலந்துகொண்ட பிறகு இந்தக் கடிதத்தை எழுதியுள்ளோம். எனவே இந்தியத் தேர்தல் ஆணையம், வேறு விதமான எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்களை உருவாக்குவதற்கு முனையவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.எங்களது ஆராய்ச்சிக் குழுவினர் உலகம் முழுவதும் இதுபோன்ற வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பரிசோதித்து மதிப்பீட்டு அறிக்கையை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எங்களது அனுபவம், திறமையை வேண்டுமானால் நீங்கள் இங்கு வந்து பார்த்து அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இதே மாநாட்டில் பங்கேற்ற இந்திய துணை தேர்தல் ஆணையர் அலோக் சுக்லா, சென்னை ஐஐடி முன்னாள் இயக்குநர் பி.வி. இந்திரேசன் ஆகியோர் கூறியதாவது: இந்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முழு நம்பகத்தன்மை கொண்டவை. இந்திய தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப்படி முழு நிர்வாகப் பாதுகாப்பு வசதிகளுடன் மின்னணு இயந்திரங்களைப் பயன்படுத்தி வருகிறோம். எனவே வாக்குப்பதிவு முறையை மாற்றுவது தொடர்பான கோரிக்கையை யாரும் நியாயப்படுத்தத் தேவையில்லை.
தற்போதுள்ள இயந்திரங்களில் ஏதாவது வித்தியாசத்தை உணர்ந்தால் அதை தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு வரலாம். ஆனால் அதே நேரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இயந்திரங்களை டிரோஜன் வைரஸ் மூலம் செயலிழக்கச் செய்ய முடியும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment