Aug 2, 2010

வன்னியில் 4 லட்சம் சிங்களர்களை குடியேற்ற இலங்கை முயற்சி: தமிழ் தேசிய கூட்டமைப்பு புகார்.

கொழும்பு, ஆக.2: இலங்கையின் வன்னிப் பகுதியில் 4 லட்சம் சிங்களர்களை குடியேற்ற அந்நாட்டு அரசு முயற்சித்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.சுரேஷ் பிரமேச்சந்திரன் புகார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: முறையான அரசியல் தீர்வை ஏற்படுத்துவது தொடர்பாக இலங்கை அரசு திட்டமிட வேண்டும்.

ஏனைய தமிழ் கட்சிகளும் தமிழ் மக்களுக்கு நன்மை சேர்க்கும் வகையில் செயல்பட்டால் அவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். கிளிநொச்சியில் அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கு தமிழ் மக்களை மீண்டும் குடியமர்த்துவது தொடர்பாக வலியுறுத்தவில்லை.

மேலும் அதுதொடர்பாக தீர்மானம் எதையாவது கொண்டு வந்தார்களா? இலங்கை அதிபரிடம் பேசினார்களா? ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் ஏதாவது மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.மீள் குடியமர்வு என்ற பெயரில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லமுடியாத நிலையில் உள்ளனர்.

வன்னியில் மீள் குடியமர்வு தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிபர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. வன்னியின் பெரும் பகுதிகள் ராணுவத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்று அவர் குற்றம்சாட்டினார்.

இந்தியத் தூதர்: இந்தியாவின் சார்பில் இலங்கை வரவுள்ள சிறப்புத்தூதர், பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகள் மற்றும் குடியமர்வு செய்யப்பட்ட பகுதிகளை இலங்கை அரசின் வழிகாட்டுதலின்றி, இந்தியத் தூதரின் துணையோடு பார்வையிட வேண்டும். அவ்வாறு செய்தால் அதை வரேவற்போம்.

இலங்கையின் வன்னிப் பகுதியில் ராணுவத்தினரோடு சுமார் 4 லட்சம் சிங்களர்களையும் இலங்கை அரசு குடியமர்த்த முயற்சித்து வருகிறது. இதன்மூலம் இந்திய அரசுக்கும்,தமிழ் கூட்டமைப்புக்கும் அளித்த வாக்குறுதியை இலங்கை அரசு மீறி வருகிறது என்று அவர் குற்றம்சாட்டினார்.

No comments: