Jul 7, 2010

நக்சலைட்களின் செய்தித் தொடர்பாளரான ஆசாத் என்பவர் கொல்லப்பட்டதை அடுத்து 48 மணி நேர பாரத் பந்த் மாவியோஸ்டுகள் அறிவிப்பு.

டெல்லி: மாவோயிஸ்ட் நக்சலைட்கள் அழைப்பு விடுத்திருந்த 48 மணி நேர பாரத் பந்த் இன்று காலை தொடங்கியது. இதையடுத்து நக்சல் பாதித்த மாநிலங்களில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரயில்வே பாதைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ரயில்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நக்சலைட்களின் செய்தித் தொடர்பாளரான ஆசாத் என்பவர் ஆந்திர மாநிலத்தில் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து 48 மணி நேர பாரத் பந்த் நடத்தப்படும் என மாவியோஸ்டுகள் அறிவித்தனர். இந்த பந்த் இன்றுகாலை தொடங்கியது.

இதையடுத்து நக்சலைட்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ள அனைத்து மாநிலங்களிலும் அதி தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆசாத் கொலைக்குப் பழிவாங்கும் வகையில் ரயில் தகர்ப்பு உள்ளிட்டவற்றில் நக்சல்கள் ஈடுபடலாம் என்பதால் ரயில் பாதைகள், ரயில்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் பந்த் தினத்தின்போது ரயிலில் பயணம் செய்ய வேண்டாம் என பொதுமக்களை நக்சலைட்கள் எச்சரித்துள்ளனர்.இதையடுத்து சட்டிஸ்கர், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஆந்திரா உள்ளிட்ட நக்சலைட்கள் பாதிப்புக்குள்ளான அனைத்து மாநிலங்களிலும் ரயில்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, ஒரிசா, பீகார்,மேற்குவங்கம், சட்டிஸ்கர், ஜார்க்கண்ட், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கெல்லாம் ரயில் பாதைகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

No comments: