கொழும்பு: இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து திட்டமிட்டபடி இந்த மாத இறுதியில் விசாரணை தொடங்கும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையில் போராட்டங்கள் நடப்பது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை என்று ஐ.நா. அமைத்துள்ள நிபுணர் குழுவின் தலைவரான மர்சுகி தருஸ்மான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நிபுணர் குழு தனது பணிகளை ஆரம்பிப்பதற்காக இம்மாதம் மூன்றாவது வாரத்தில் கூடவுள்ளது. தேதி இன்னும் இறுதியாகவில்லை. இந்தக் குழுவை எதிர்த்து நடந்து வரும் போராட்டங்கள் குறித்து நாங்கள் கருத்தில் கொள்ளவில்லை.இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் முட்டாள்கள் என்று இலங்கை அமைச்சர் வீரவன்ச குறியுள்ளது குறித்து கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை என்றார் தருஸ்மான்.
கொழும்பு ஐ.நா. அலுவலகம் மூடல்: இதற்கிடையே சிங்கள அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் நேற்று சிங்கள வெறியர்கள் ஐ.நா. அலுவலகத்தை தாக்கி உள்ளே புக முயன்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் கடுமையாகப் போராடி அலுவலகத்திற்குள் சிக்கிக் கொண்ட ஊழியர்கள் பத்திரமாக வெளியேற உதவினர். கலகக்காரர்கள் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் உருவப்படம், ஐ.நா. கொடி ஆகியவற்றை தீயிட்டுக் கொளுத்தி பெரும் ரகளையில் ஈடுபட்டனர்.
இந்தக் குழுவை பான் கி மூன் வாபஸ் பெறும் வரை போராட்டம் நடத்துவோம் என்று கூறி அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர் சிங்கள வெறியர்கள். இந்த வன்முறையைத் தொடர்ந்து ஐ.நா. அலுவலகம் மூடப்பட்டுள்ளது. முன்னதாக போராட்டத்தின்போது வீர வன்ச கூறுகையில் இலங்கை போர் குற்றங்களை விசாரிக்க ஐ.நா. 3 நபர் குழுவை நியமித்துள்ளது.
வடக்கு, கிழக்குப் பிராந்தியங்களில் விடுதலைப் புலிகளிடம் இருந்து தமிழர்களை மீட்க போர் நடந்தது. அதிபர் ராஜபக்சேவின் வழிகாட்டுதலில் நடந்த இந்தப் போரில் மனித உரிமைகள் மீறப்படவில்லை. ஆனால், ஐ.நா. குழு அந்த போர் குறித்து விசாரித்து விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக அறிக்கை அளிக்க திட்டமிடுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றார்.
கடந்த திங்கட்கிழமை அன்று இலங்கை நாடாளுமன்றத்தில் இது குறித்து ராணுவ முன்னாள் தளபதியும், எதிர்க்கட்சி எம்.பி.யுமான சரத் பொன்சேகா பேசினார். அப்போது அவர் ஐ.நா. குழுவின் விசாரணையை இலங்கை அரசு தைரியமாக எதிர்கொள்ள வேண்டும், மனித உரிமைகள் மீறப்படவில்லை என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களை அளிக்க வேண்டும் என்றார்.
மேலும் அவர், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் சர்வதேச விதிகளுக்கு உட்பட்டே நடந்தது. அதில் மனித உரிமைகள் மீறப்படவில்லை. இந்தப் பிரச்னையில் ராணுவத்திற்கு என் ஆதரவு எப்பொழுதும் உண்டு என்றார்.
அமெரிக்கா கண்டனம்: ஐ.நா.வுக்கு எதிராக கொழும்பில் நடந்து வரும் கலகங்கள் குறித்து அமெரிக்கா அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், விசாரணை நடத்துவதை தடுக்கக் கூடாது. விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கோரினார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment