Apr 20, 2010

பெங்களூர் குண்டுவெடிப்பு: ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கங்களுக்கு தொடர்பா?

பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தின் அருகில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி துவங்குவதற்கு 45நிமிடங்களுக்கு முன்பு இரண்டு குண்டுகள் வெடித்தன. இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது.
வெடித்தது சக்திக் குறைவான குண்டுகள் என்றும் இதுத்தொடர்பாக தீவிரவிசாரணை நடந்து வருவதாகவும் கர்நாடகா மாநில உள்துறை அமைச்சரும், போலீஸ் கூடுதல் டி.ஜி.பியும் கூறியுள்ளனர்.

ஐ.பி.எல்லில் நடைபெற்ற ஊழல் குறித்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சை எழுந்த நிலையிலும் அதில் மத்திய அமைச்சர் உள்ளிட்ட பெரும்புள்ளிகளின் பெயர்கள் வெளிவந்த நிலையில்தான் இந்தக் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. இதன்மூலம் ஊழல் பிரச்சனையை மக்கள் மறக்கச் செய்வதற்காகத்தான் இந்தக் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது.

மேலும் கிரிக்கெட்டில் இன்று சூதாட்டம் பல்கி பெருகியுள்ள சூழலில் இக்குண்டுவெடிப்புகள் சூதாடிகளின் கைங்கர்யமாக இருக்கலாம் என்றதொரு சந்தேகமும் எழுந்துள்ளது. வெடித்த குண்டுகள் சக்திக் குறைவானதாக இருந்தாலும், இதன்மூலம் ஸ்டேடியத்தில் கிரிக்கெட் போட்டியை காண குழுமியிருந்த 40 ஆயிரம் பார்வையாளர்களை பதட்டத்திற்குள்ளாக்கி நெரிசலை ஏற்படுத்துவதன் மூலம் மரணங்களை ஏற்படுத்தலாம் என்பதும் குண்டு வைத்தவர்களின் நோக்கமாக இருக்கலாம்.

ஆனால் இவையெல்லாவற்றையும் விட சமீபத்தில் கேரள மாநிலத்திலிருந்து பெங்களூர் சென்ற கிங்ஃபிஷர் விமானத்தில் குண்டுவைத்ததாக ஹரித்துவார் மித்ரா மண்டல் என்ற ஹிந்துத்துவா இயக்கத்தைச் சார்ந்த ராஜசேகரன் நாயர் கைதுச் செய்யப்பட்டார். ஹரித்துவார் மித்ரா மண்டல் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடி முதல்வராக இருக்கும் குஜராத்தை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இவ்வியக்கத்திற்கும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் தொடர்பு உள்ளதற்கு ஆதாரம் உள்ளது.

இந்நிலையில் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் வெடித்தக் குண்டுகள் இவ்வியக்கத்தின் செயல்பாடாக இருக்குமோ என்றதொரு சந்தேகமும் எழுகிறது. மேலும் இதுத்தொடர்பாக கேரளாவில் இவ்வியக்கத்தைச் சார்ந்தவர்களையும், கைதுச்செய்யப்பட்ட ராஜசேகரன் நாயரிடமும் தீவிர விசாரணை நடத்தினால் உண்மைகள் வெளிவரலாம். கடந்த ஆண்டு பெங்களூரில் பள்ளிவாசல் ஒன்றில் பன்றியின் மாமிசத்தை எறிந்து ஹிந்து-முஸ்லிம் கலவரம் உருவாக்கத் திட்டமிட்ட ஸ்ரீராமசேனா என்ற பயங்கரவாத இயக்கத்திற்கு இக்குண்டுவெடிப்பிற்கும் தொடர்பிருக்குமா என்பது குறித்தும் புலனாய்வு மேற்க்கொள்ள வேண்டும். ஏனெனில் குண்டுவெடிப்பை பயன்படுத்தி அதன் மூலம் ஹிந்து-முஸ்லிம் கலவரத்திற்கு அவர்கள் திட்டமிட்டிருக்கலாம்.

கடந்த தீபாவளி தினத்திற்கு முந்திய தினத்தில் கோவாவில் ஹிந்துக்கள் கூடும் பகுதியில் குண்டுவைத்து நாசம் விளைவித்து அதன் பழியை முஸ்லிம்கள் மீது போடலாம் என்று திட்டமிட்ட சனாதன் சன்ஸ்தான் என்ற அமைப்பின் சதித்திட்டம் அம்பலப்படுத்தப்பட்டது.
இதுக்குறித்து தேசிய புலனாய்வு ஏஜன்சி விசாரணை மேற்க்கொண்டு வருகிறது. அவ்வமைப்பிற்கு பெங்களூர் குண்டுவெடிப்பில் தொடர்புள்ளதா என்பதைக் குறித்தும் புலனாய்வு மேற்க்கொள்ளப்பட வேண்டும். பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கு மாற்றமாக பசுவதைச் சட்டம் கொண்டுவந்தது, பெங்களூர் மாநகராட்சித் தேர்தலில் பணத்தை வாரியிறைத்து வெற்றியை ஈட்டியது உள்ளிட்ட பா.ஜ.க அரசின் செயல்பாடுகளால் மக்கள் பா.ஜ.க ஆட்சி மீது வெறுப்புற்றுள்ள சூழலில் இக்குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளதால் இதுக்குறித்தும் விசாரணை மேற்க்கொள்ளப்பட வேண்டும்.

ஹிந்துத்துவா பாசிச வாதிகள் தங்கள் நலனுக்காக சொந்த சமூகத்தினரையும் கொல்வதற்கு தயங்காதவர்கள். இது கோத்ரா ரெயில் எரிப்பு மூலம் நாடறிந்த உண்மை. ஆகவே பெங்களூர் குண்டுவெடிப்புகள் குறித்து முழுமையான பாரபட்சமற்ற புலனாய்வு விசாரணை தேவைப்படுகிறது. அவ்விசாரணையை மேற்க்கொள்ளும் தகுதி கர்நாடகா போலீசாருக்கு இல்லை. ஏனெனில் ஆள்வது பா.ஜ.க அரசாகும். பா.ஜ.க ஆட்சியில் பாரபட்சமற்ற விசாரணை நடைபெற சாத்தியமில்லை. அவர்கள் இல்லாத புதிய முஸ்லிம் இயக்கத்தை உருவாக்கி அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை சிறையிலடைக்க திட்டமிடலாம். எனவே மத்திய அரசு இதில் தலையிட்டு தேசிய புலனாய்வு ஏஜன்சியிடம் இக்குண்டுவெடிப்பு வழக்குகளை ஒப்படைத்து பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும்.

No comments: