டெல்லி:டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் ஷாஹி இமாம் அஹ்மத் புஹாரி அவர்கள் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தார்.அப்பொழுது பாட்லா ஹவுஸில் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட ஆதிஃப் அமீன் மற்றும் முஹம்மது ஷாஜிதின் போஸ்ட்மார்ட்டம் அறிக்கை மற்றும் மேற்க்கண்ட இருவரும் கொல்லப்பட்ட நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பிரதமரிடம் அளித்த ஷாஹி இமாம், இந்த ஆவணங்கள் பாட்லா ஹவுஸில் நடத்தப்பட்ட என்கவுண்டர் போலி என்பதை நிரூபிப்பதாகவும், பிரதமர் உடனடியாக இதுத்தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
பிரதமரை சந்தித்தது தொடர்பாக ஷாஹி இமாம் அஹ்மத் புஹாரி twocircles.net என்ற இணையதள இதழுக்கு பேட்டியளிக்கையில், தான் பாட்லா ஹவுஸில் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட இரு முஸ்லிம் இளைஞர்களின் போஸ்ட்மார்ட்டம் அறிக்கையையும், புகைப்படங்களையும் காட்டி பிரதமரிடம் விளக்கியதாகவும், மேலும் சமீபத்தில் தேசிய மனித உரிமை கமிஷன் வெளியிட்ட போலி என்கவுண்டர்கள் பட்டியலில் பாட்லா ஹவுஸ் என்கவுண்டரை இணைத்திருப்பதையும் சுட்டிக்காட்டிய பொழுது, அந்த ஆவணங்களை ஆச்சரியத்துடன் பார்த்த பிரதமர் தனக்கு இந்த உண்மைகளைப் பற்றி முழுமையாக தெரியாது எனவும் இப்பிரச்சனைத் தொடர்பாக உள்துறை அமைச்சரிடம் பேசுவதாகவும் கூறினார். என ஷாஹி இமாம் தெரிவித்தார்.
மேலும் தான் பிரதமரிடம்,"முஸ்லிம் சமூகம் பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் போலி என்றும் ஆனால் அரசு அது தொடர்பான நீதி விசாரணைக்கு மறுக்கிறது என்ற ஆழ்ந்த கவலையில் உள்ளது. நீதி விசாரணை நடத்தினால் அது போலீசின் நம்பிக்கையை இழக்கச் செய்யும் என அரசு கருதுகிறது.ஆனால் நீதிவிசாரணை நடத்தாவிட்டால் இந்தியாவின் மிகப்பெரிய சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களின் நம்பிக்கையை அது இழக்கச்செய்துவிடும்" என்றுக் கூறியதாக இமாம் அஹ்மத் புஹாரி தெரிவித்தார்.
"தீவிரவாத வழக்குகளை விரைவாக விசாரிக்க வேண்டும். இதில் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டி அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் பல சிறைகளில் வாடுகின்றனர். பிரதமர் முஸ்லிம் சமூகத்தின் துயரநிலையை உணரவேண்டும். ஏனெனில் பிரதமரும் ஒரு சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவர்தான், 1980களில் சீக்கிய சமூகம் சந்தித்த அதிர்ச்சியான காலக்கட்டத்தை சந்தித்தவர்தான் அவர்". இவ்வாறு இமாம் புஹாரி தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment