Mar 27, 2010

திருச்சி அரசு மருத்துவமனையின் அவலங்கள்; போராட்டத்தில் பயிற்சி மருத்துவர்கள்.

இலவசத் திட்டங்கள் மூலம் மக்களை ஏய்த்துவரும் தி.மு.க.அரசு, "கலைஞர் காப்பீடு திட்ட"த்தின் மூலம் ஸ்டார் ஹெல்த் என்ற தனியார் ஏகபோக காப்பீடுநிறுவனத்தின் கொள்ளைக்கு பல கோடிகளை அள்ளிக்கொடுத்துவிட்டு, அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைத் திட்டமிட்@ட புறக்கணித்துவருகிறது. இதன் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் திருச்சி அரசு மருத்துவமனையில் மாண்டுபோன பச்சிளம் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 1325. இறந்த குழந்தைகள் பெரும்பாலும் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாததாலும், அப்படியே இருந்தாலும் செயற்கை சுவாசக் கருவிகள் (வென்டிலேட்டர்) இல்லாததாலும் மாண்டு போயுள்ளன என்ற உதிரத்தை உறைய வைக்கும் செய்தி கடந்த மாதத்தில் கசியத் தொடங்கியது. விபத்து அவசர சிகிச்சை, பாம்புக்கடி உள்ளிட்ட எல்லா விதமான உயிர் காக்கும் சிகிச்சைகள் தேவைப்படும் பிரிவுகளுக்கும் ஒரேயொரு வென்டிலேட்டர் மட்டுமே இம்மருத்துவமனையில் உள்ளது.

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட கட்சி பிரமுகர்களின் தனியார் மருத்துவமனைகளின் கொள்ளைக்காகவே, அரசு மருத்துவமனை எவ்வித அடிப்படை வசதியுமின்றி புறக்கணிக்கப்படுகிறது. அரசின் முழுநேர ஊழியர்களான மருத்துவர்கள் மட்டுமின்றி, இம்மருத்துவமனையின் கல்வி நிலையத் தலைவர் (டீன்) பொறுப்பில் உள்ள மருத்துவர் பாலசுப்பிரமணியமும், தங்கம் மருத்துவமனை என்ற தனியார்மருத்துவமனையை நடத்துகிறார். இதனால் மருத்துவர்களே மருத்துவமனையில் இருப்பதில்லை. காலை ஷிப்டில் செவிலியர்கள், பரிசோதனைக்கூடஆய்வாளர்கள், பணியாளர்கள் என இம்மருத்துவமனையில் ஏறத்தாழ ஆயிரம்பேர் வேலை செய்தாலும், அடுத்த ஷிப்டுக்குபோதிய ஊழியர் நியமிக்கப்படாததால், பிற்பகலில் எந்தப் பிரிவும் இயங்குவதில்லை.

பயிற்சி மருத்துவர்களைக் கட்டாயப்படுத்தி பிற்பகலில் இப்பணிகளைச் செய்யவைக்கிறது, நிர்வாகம். போதிய அளவுக்கு மருத்துவர்கள் ஊழியர்களை நியமிக்காமல் நிர்வாகம் ஏய்த்து வருவதோடு, "அட்மிஷன் டே' என்ற முறைப்படி, ஓய்வின்றி தொடர்ச்சியாக 31 மணி நேரம் கட்டாய வேலையும் எடுபிடிவேலையும் வாங்குவதையும் கண்டு குமுறிய பயிற்சி மருத்துவர்கள், கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதலாக, 8மணி நேர ஓய்வை தாங்களே நடைமுறைப்படுத்தும் போராட்டத்தைத் தொடங்கினர்.நேர்மையான விசாரணை நடத்தக்கோரி மருத்துவமனையெங்கும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை போலீசை ஏவி நிர்வாகம் கிழிக்க முற்பட்டபோது, பயிற்சி மருத்துவர்களும் சிகிச்சை பெற வந்த பொதுமக்களும் போராடித் தடுத்தனர்.

No comments: