Jan 16, 2010

ஆயுர்வேதம் அறிய அமெரிக்க டாக்டர்கள் குழு இந்தியா வருகிறது


வாஷிங்டன்,ஜன.16: ஆயுர்வேத மருத்துவத்தின் சிறப்புகளையும் பயன்களையும் சிகிச்சை முறைகளையும் நேரில் அறிய அமெரிக்காவிலிருந்து ஆறு டாக்டர்களைக் கொண்ட குழு இந்தியா வருகிறது. இந்தக் குழு எப்போது வரும் என்ற தேதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.

ஆயுர்வேத மருந்துகளைத் தருவதுடன் யோகாசனம், தியானம், எண்ணெய் மசாஜ் உள்ளிட்ட பிற சிகிச்சை முறைகளையும் இந்தக் குழுவினர் நேரில் பார்த்துத் தெரிந்துகொள்வார்கள். இந்த டாக்டர்கள் இப்போது அமெரிக்காவில் மாற்று மருத்துவமுறை சிகிச்சையாக ஆயுர்வேதத்தைத்தான் கையாள்கின்றனர். இத்துறையில் இப்போது புதிதாகக் கையாளப்படும் வழிமுறைகளை நேரில் அறிவதற்காகவே வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் எந்த மருத்துவமுறையாக இருந்தாலும் நோய் என்ன, நோயாளிக்கு அளித்த மருந்துகள் எவையெவை, சிகிச்சை வழிமுறைகள் என்ன, அதனால் ஏற்பட்ட பலன் என்ன என்பதை ஆவணப்படுத்தி அளித்தால்தான் ஏற்பார்கள். அத்துடன் பாதிக்கப்பட்டு பிறகு சிகிச்சையால் பயன் பெற்ற நோயாளியிடமே நேரில் கேட்டு சந்தேகங்களுக்கு விளக்கம் பெறுவார்கள். எனவே அந்த வகையிலேயே இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

அமெரிக்க டாக்டர்கள் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள ஆயுர்வேதக் கல்லூரிக்கு வந்து அங்கு நோயாளிகள் பரிசோதிக்கப்படுவது, மருந்துகள் தரப்படுவது, நோயாளிகள் பலன் அடைவது ஆகியவற்றை நேரில் பார்த்து ஆவணப்படுத்துவார்கள்.குறிப்பிட்ட 5 நோய்களைத் தேர்வு செய்து அவற்றுக்கு ஆயுர்வேதம் மூலம் அளிக்கப்படும் சிகிச்சைகளை அவர்கள் பதிவு செய்துகொள்வார்கள்.

இந்தக் குழுவைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து ஆயுர்வேத டாக்டர்கள் கொண்ட குழு அமெரிக்கா சென்று அங்குள்ள சில பல்கலைக் கழகங்களில் டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்குப் பதில் அளிப்பதுடன் ஆயுர்வேதத்தில் நோயை அறியும் முறையையும் நோய்க்கு உரிய சிகிச்சை வழிமுறைகளையும் விவரிப்பார்கள். இது இரு நாடுகளுக்கு இடையில் இத்துறையில் மேலும் ஒத்துழைப்பு அதிகரிக்க உதவும் என்று டாக்டர்கள் நம்புகின்றனர்.

No comments: