Dec 19, 2009

லவ் ஜிஹாத் வழக்கில் தொடர் விசாரணைக்குத் தடை - நீதிமன்றம் உத்தரவு

கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த "லவ் ஜிஹாத்" இயக்கம் தொடர்பான விவாதங்கள் ஏற்பட காரணமான காதலிப்பது போல் நடித்துப் பெண்களைக் கடத்திக் கொண்டு செல்வது தொடர்பான வழக்கு விசாரணையின் மீது கேரள நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்தச் சில வாரங்களாக கேரள மக்களிடையே மிக பரபரப்பாக பேசப்படும் விஷயம் "லவ் ஜிஹாத்" ஆகும். இந்தப் பெயரில் முஸ்லிமல்லாத மதப் பெண்களைக் காதலிப்பது போல் நடித்துக் கடத்திச் சென்று கட்டாய மதமாற்றம் செய்யும் இலட்சியத்துடன் ஒரு இயக்கம் கேரளத்தில் இயங்கி வருவதாகவும் அதனைக் குறித்த விவரங்களும் கடந்த ஆண்டில் காணாமல் போன பெண்களைக் குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய உள்துறையும் கேரள காவல்துறை ஐஜியும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணையின் போது நீதிபதி கே.ட்டி. சங்கரன் உத்தரவிட்டிருந்தார். இதுவே விவாதங்கள் ஏற்படுவதற்கும் கேரள மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்துவதற்கும் காரணமாக இருந்தது.

இந்த உத்தரவைப் பிறப்பிக்கக் காரணமாக இருந்த காதலிப்பது போன்று நடித்து பெண்களைக் கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணையையே நீதிபதி எம். சசிதரன் தடை செய்து உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கில் நீதிமன்றத்திலிருந்து மறு உத்தரவு வரும் வரை விசாரணை நடத்தக்கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கிரிமினல் நீதி, நியாய அமைப்புகள் இவ்வழக்கில் தவறாகப் பயனபடுத்தப்பட்டுள்ளதாக நீதிபதி தன் தடையுத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இரண்டு பெண்களைக் காதலிப்பது போல் நடித்து கடத்திக் கொண்டு சென்றதாக இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஷஹன்ஷா மற்றும் சிராஜுதீன் ஆகியோர் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரி சமர்ப்பித்த புகாரின் மீதான விசாரணை வேளையிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

"வழக்கின் குறிப்புகளைச் சோதித்ததிலிருந்து, இவ்வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரியின் ஆச்சரியப்படுத்தும் நடவடிக்கைகள் நீதிபதியின் மனசாட்சியை உலுக்குவதாக இருந்தன" என்றும் நீதிமன்றம் கூறியது. விசாரணை வேளையில் "காதல் திருமணங்கள் தண்டனைக்குரிய குற்றங்களல்ல" என்றும் நீதிபதி எம். சசிதரன் நம்பியார் உத்தரவின் போது குறிப்பிட்டார்.

"இவ்வழக்கு விசாரணை அதிகாரி சில இணையதளங்களிலிருந்து கிடைத்த விவரங்களின் அடிப்படையில் வழக்கு விசாரணையை நடத்தியுள்ளதாக நீதிமன்றம் கண்டுபிடித்தது. ஒரு தனிப்பட்ட சமுதாயத்தை மட்டும் குறி வைத்து நடத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஏற்றுக்கோள்ளத்தக்கவையல்ல; எல்லா சமுதாயங்களிலும் காதல் திருமணங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில், எக்காரணத்திற்காக ஒரு தனிப்பட்ட சமுதாயத்தை மட்டும் குறி வைத்து மதம்மாற்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன" என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

"கிறிஸ்தவ-இந்து சமுதாயங்களிலுள்ளவர்களும் திருமணங்கள் மூலம் மற்ற சமுதாயத்திற்கு மதம் மாறுகின்றனர். அன்பே இதற்கு அடிப்படைக்காரணம். அல்லாமல் இதற்கு வேறு விபரீத அர்த்தங்கள் நல்குவது சரியல்ல. வழக்கின் வாதிகளாக சேர்க்கப்பட்ட இரண்டு பெண்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த விசாரணை அதிகாரி, அவர்களின் கையொப்பமும் கைரேகைப் பதிவும் செய்ய வேண்டிய காரணம் என்ன?" என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

"விசாரணை அதிகாரி வழக்கின் வாதிகளிடம் இவ்வாறு நடந்து கொண்டது சட்டவிரோதமாகும். விசாரணை அதிகாரி தெரியாமல் இதைச் செய்து விட்டார் என்று கருதுவதற்கு இடமில்லை. இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்து வரும் திருவனந்தபுரம் துணை போலீஸ் கமிசனர், எம்.பி.ஏ மாணவிகளான பெண்களின் வாக்குமூலத்தில் கையொப்பமும் கைரேகையும் பதித்ததற்கான காரணமும் அதற்குரிய அதிகாரம் அவருக்கு உள்ளதா? என்பதைக் குறித்தும் விளக்கி வாக்குமூலம் சமர்ப்பிக்க வேண்டும்" என நீதிமன்றம் கட்டளையிட்டது.

நீதிமன்ற உத்தரவுக்குப் பின், "இவ்வழக்கை விசாரிக்க உபயோகித்த வழிமுறைகளைக் குறித்து விளக்கம் கேட்பதாக" அரசு வழக்கறிஞர் டைரக்டர் ஜனரல் நீதிபதியிடம் உறுதிமொழி அளித்தார்.

முன்னர், இவ்வழக்கு விசாரணை வேளையில் விவாதத்தை உருவாக்கிய, "லவ் ஜிஹாத் இயக்கம்" குறித்த விசாரணையைச் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி கெ.ட்டி. சங்கரனின் உத்தரவுக்கிணங்க, விசாரணை மேற்கொண்ட டி.ஜி.பி ஜேக்கப் புன்னூஸ், "கேரளத்தில் அவ்வாறான பெயரில் ஒரு இயக்கம் செயல்படவில்லை" என அறிக்கை சமர்ப்பித்திருந்தார். பின்னர் மத்திய உள்துறை அமைச்சகமும் "லவ் ஜிஹாத் என்றொரு இயக்கம் இல்லை" என அறிக்கை சமர்ப்பித்தது.

இருப்பினும், "கட்டாய மதமாற்றங்களுக்கு எதிராக சட்டம் கொண்டு வர வேண்டும்" என வழக்கை விசாரித்த நீதிபதி கெ.ட்டி. சங்கரன் உத்தரவிட்டிருந்தார். இவ்வுத்தரவைக் கேள்விக்குட்ப்படுத்திய நீதிபதி சசிதரன், வழக்கின் தொடர் விசாரணையை மறு உத்தரவு வரும் வரை தடை செய்வதாக உத்தரவிட்டார்.

"லவ் ஜிஹாத்" என்ற சொல்லை கேரளத்திலிருந்து வெளியாகும் மலையாள மனோரமா என்ற பத்திரிக்கையே முதலில் பயன்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இச்சொல்லால் மிகப் பெரிய பரபரப்பு ஏற்பட காரணமாக இருந்த நீதிமன்றமே தற்போது அதனைக் கேள்விக்குட்படுத்தி விவாதங்களை முடிவுக்குக் கொண்டு வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

No comments: